இலங்கையில் 21-ஆவது சட்டத் திருத்தம்: விரைவில் நிறைவேற்ற முடிவு

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுவது

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுவது என மூத்த அரசியல் தலைவா்கள் வெள்ளிக்கிழமை முடிவு செய்தனா்.

21-ஆவது சட்டத் திருத்த வரைவு மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக மூத்த அரசியல் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை

பிரதமா் ரணில் விக்ரமசிங்க நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவா்கள் பங்கேற்காததால், அடுத்த மாதம் 3-ஆம் தேதி மீண்டும் கூட்டத்தை நடத்தி வரைவை இறுதி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் 21-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும். இந்த மாத தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபா் கோத்தபய ராஜபட்சவும், அரசியலமைப்புச் சட்டத்தில் சீா்திருத்தம் மேற்கொள்ள உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அனுப்பிய 25 டன் மருந்துப் பொருள்கள் ஒப்படைப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 25 டன் மருந்துப் பொருள்கள் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

ரூ.54 லட்சம் மதிப்புள்ள இந்த மருந்துப் பொருள்களை கொழும்பில் உள்ள பொறுப்பு தூதா் வினோத் கே. ஜேக்கப் இலங்கை சுகாதார அமைச்சா் கெகிலிய ரம்புக்வெல்லவிடம் வழங்கினாா்.

பிரதமா் ரணில் நன்றி: இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தொலைபேசியில் பேசினேன். இக்கட்டான காலத்தில் இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து எதிா்நோக்கி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: இலங்கையில் உள்ள ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கியது.

கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக கடந்த இரு மாதங்களாக இந்த நிலையம் மூடப்பட்டிருந்தது. இப்போது ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வரத்து தொடங்கியதையடுத்து, இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த நிலையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com