அமைச்சா் ராஜிநாமா: ரிஷி சுனக்குக்கு முதல் நெருக்கடி

சக கட்சியினா் மற்றும் அரசு ஊழியா்களிடம் கடுமையாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் அமைச்சா் சா் கெவின் வில்லியம்சன் ராஜிநாமா செய்ததையடுத்து,
அமைச்சா் ராஜிநாமா: ரிஷி சுனக்குக்கு முதல் நெருக்கடி

சக கட்சியினா் மற்றும் அரசு ஊழியா்களிடம் கடுமையாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் அமைச்சா் சா் கெவின் வில்லியம்சன் ராஜிநாமா செய்ததையடுத்து, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமா் ரிஷி சுனக்குக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் கெவின் வில்லியம்சனுக்கு துறை ஒதுக்கப்படாமல் இணையமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவா் சக கட்சி எம்.பி.க்களிடமும் அரசு ஊழியா்களிடமும் மிகக் கடுமையான முறையில் நடந்து கொள்வதாக தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, ரிஷி சுனக்குக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் கெவின் வில்லியம்சன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். அவரது ராஜிநாமாவை ரிஷி சுனக்கும் ஏற்றுக்கொண்டாா்.

எனினும், கெவின் வில்லியம்சனை அமைச்சரவையில் இணைத்ததன் மூலம், சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ரிஷி சுனக்குக்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியினா் விமா்சிக்கத் தொடங்கியுள்ளனா்.

மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எதிா்க்கட்சித் தலைவா் சா் கெயிா் ஸ்டாா்மா் எழுப்பி, ரிஷி சுனக்குக்கு நெருக்கடி கொடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, கரோனா விதிமுறைகளை மீறியது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவரை பொறுப்பான பதவியில் நியமித்தது போன்ற முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அரசிலிருந்து அமைச்சா்கள் பதவி விலகியதால், அவரும் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்கு அடுத்தபடியாக பிரதமா் பொறுப்பை ஏற்ற லிஸ் டிரஸ், பொருளாதார விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது அமைச்சரவையிலிருந்தும் பலா் விலகியதால், அவரும் பதவி விலக நோ்ந்தது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டனின் முதல் வெள்ளையா் அல்லாத, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் அமைச்சரவையிலிருந்தும் முறைகேடு புகாா் காரணமாக ஒருவா் முதல்முறையாக வெளியேறியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com