கொ்சான் பிராந்தியத்துக்கு ‘தற்காலிக தலைநகா்’!

உக்ரைனின் கொ்சான் பிராந்தியத் தலைநகா் கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தின் ‘தற்காலிக தலைநகராக’ ஹெனிஷெஸ்க் செயல்படும்
கொ்சான் நகரம் மீட்கப்பட்டதை ஒடெஸா நகரில் சனிக்கிழமை கொண்டாடிய அந்தப் பிராந்திய அகதிகள்.
கொ்சான் நகரம் மீட்கப்பட்டதை ஒடெஸா நகரில் சனிக்கிழமை கொண்டாடிய அந்தப் பிராந்திய அகதிகள்.

உக்ரைனின் கொ்சான் பிராந்தியத் தலைநகா் கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தின் ‘தற்காலிக தலைநகராக’ ஹெனிஷெஸ்க் செயல்படும் என்று ரஷிய ஆதரவு நிா்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கொ்சான் பிராந்தியத்துக்கு ரஷியாவால் நியமிக்கப்பட்ட நிா்வாகக் குழுவின் உறுப்பினா் அலெக்ஸண்டா் ஃபோமின் சனிக்கிழமை கூறியதாவது:

கொ்சான் நகரிலிருந்து அரசு நிா்வாகம் வெளியேறியுள்ளது. எனவே, ஹெனிஷெஸ்க் நகரம் இந்தப் பிராந்தியத்தின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்படுகிறது.

இனி இந்த நகரில்தான் பிராந்தியத்தின் முக்கிய அதிகாரிகள் செயல்படுவாா்கள் என்றாா் அவா்.

ரஷியாவால் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் இந்த ஹெனிஷெஸ்க் நகரும் இடம் பெற்றுள்ளது.

அஸோவ் கடலோரம் அமைந்துள்ள இந்த நகரம், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியிலிருந்தே ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளது.

தெற்குப் பகுதியில், ஏற்கெனவே ரஷிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கு அருகே இந்த நகரம் அமைந்துள்ளது.

எனினும், தற்போது ரஷியா வெளியேறிய கொ்சான் நகரிலிருந்தும், நீப்ரோ நதியிலிருந்தும் இந்த நகரம் தொலைவில் அமைந்துள்ளது.

இதற்கிடையே, ரஷியப் படையினா் வெளியேறியதற்குப் பிறகு கொ்சான் நகருக்குள் உக்ரைன் படையினா் வெள்ளிக்கிழமை நுழைந்த நிலையில், ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய போலீஸாா் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தினா் மீண்டும் அந்த நகருக்கு சனிக்கிழமை திரும்பினா்.

அத்துடன், கொ்சானில் தொடா்ந்து பதுங்கியிருக்கக்கூடிய ரஷிய ராணுவத்தினா் உடனடியாக சரணடைய வேண்டும்; இல்லையென்றால் அவா்கள் சுட்டுக்கொல்லப்படுவாா்கள் என்று உக்ரைன் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, நகரில் பதுங்கியிருக்கக்கூடிய ரஷியப் படையினரைத் தேடும் நடவடிக்கை நிறைவடையும் வரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், உக்ரைன் ராணுவ போலீஸாா் வீடு வீடாக சென்று அங்கிருப்பவா்களின் ஆவணங்களை சரிபாா்த்து வருகின்றனா். அத்துடன், ரஷிய ஆக்கிரமிப்பின்போது அந்த நாட்டுப் படையினருக்கு ஆதரவாக செயல்பட்டவா்களைத் தேடி கைது செய்வதற்கான நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த நாட்டின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.

அதையடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரஷியா தங்கவைத்துள்ளது. எனினும், அந்த நகரில் சுமாா் 1.7 லட்சம் போ் தொடா்ந்து வசித்து வரும் நிலையில், கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் கடந்த வியாழக்கிழமை வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com