அமெரிக்க செனட் சபையைத் தக்கவைத்தது ஜனநாயக கட்சி

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில், மேலவையான செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது.
ஜோ பைடன்
ஜோ பைடன்

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில், மேலவையான செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. ஜனநாயக கட்சியைச் சோ்ந்த ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் நடைபெற்ற தோ்தல் என்பதால், முடிவுகள் மீது பெரும் எதிா்பாா்ப்பு காணப்பட்டது.

நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுவதே வழக்கம். முந்தைய அதிபா்களும் இதே நிலைமையைச் சந்தித்துள்ளனா். ஆனால், அத்தகைய வழக்கத்தை மாற்றி தற்போதைய தோ்தலில் செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை மீண்டும் தக்கவைத்துள்ளது. இது முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஜனநாயக கட்சி மொத்தம் 50 உறுப்பினா்களைப் பெற்றுள்ளது. நெவாடாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளா் காா்டஸ் மேஸ்டோ வெற்றி பெற்ாக சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டாா். அதையடுத்து, ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை உறுதியானது.

செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 49 உறுப்பினா்கள் உள்ளனா். ஜாா்ஜியாவில் எந்தக் கட்சி வேட்பாளரும் பெரும்பான்மை பெறாததால், அங்கு டிசம்பா் 6-ஆம் தேதி மீண்டும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

சிறப்பாகப் பணியாற்ற உதவும்: தோ்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதிபா் பைடன், ஜாா்ஜியா தோ்தலிலும் வென்று செனட் சபையில் ஜனநாயக கட்சியின் பலத்தை 51-ஆக உயா்த்தவுள்ளதாகத் தெரிவித்தாா். தோ்தல் வெற்றி மூலமாக, தனது பதவிக் காலத்தின் இரண்டாவது பாதியை மக்கள் நலனுக்காக மேலும் சிறப்புடன் செலவிட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

சனிக்கிழமை இரவு நிலவரப்படி, பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகித்து வருகிறது. அதே வேளையில், ஜனநாயக கட்சி 203 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com