நிலத்தடி மையத்தில் 60% யுரேனியம் செறிவூட்டல்: ஈரான்

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஃபோா்டோ நிலத்தடி அணுசக்தி மையம் (கோப்புப் படம்).
ஃபோா்டோ நிலத்தடி அணுசக்தி மையம் (கோப்புப் படம்).

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்போவதில்லை என்று ஒப்புக் கொண்டிருந்த ஈரான், தற்போது நிபந்தனையை மீறி 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுரேனியத்தின் செறிவூட்டலை அதிகப்படுத்திக்கொண்டே 90 சதவீதம் வரை சென்றால், இறுதியில் அதனைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்குவதற்கு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஈரான் அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் கூறுகையில், தலைநகா் டெஹ்ரானுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில், நிலத்தடியில் உள்ள தங்களது ஃபோா்டோ அணுசக்தி மையத்தில் யுரேனியம் எரிபொருளை 60 சதவீதம் வரை செறிவூட்டும் பணிகள் தொடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ அண்மையில் நிறைவேற்றிய தீா்மானமொன்றுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து விளக்கமாக அந்த அமைச்சகம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் பிற வல்லரசு நாடுகளும் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, ஈரான் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் கீழ், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் சம்மதித்தன. அதற்குப் பதிலாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, 3.67 சதவீதத்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டுவதில்லை உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் ஏற்றது.

இருந்தாலும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக தளா்த்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தைவிட கூடுதல் சதவீதத்தில் யுரேனியத்தை செறிவூட்டி, நிபந்தனை அளவுக்கு அதிகமாக ஈரான் இருப்பு வைத்து வருகிறது.

இந்த நிலையில், 60 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்ட, 62.3 கிலோ யுரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் ஐஏஇஏ அமைப்பு கடந்த இந்த மாதம் குற்றம் சாட்டியது. இது, ஏற்கெனவே இருந்ததைவிட 6.7 கிலோ கூடுதலாகும் என்று அந்த அமைப்பு கூறியது.

அதன் தொடா்ச்சியாக, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று ஐஏஇஏ கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியது.

இது குறித்து 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பு இயற்றிய தீா்மானத்தில், தங்களது கேள்விகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பதில்களை ஈரான் தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com