சுதந்திர இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு இந்தியா-ஆஸ்திரேலியா பங்களிப்பு

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழ்வதற்கு

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழ்வதற்கு முக்கியப் பங்களித்து வருவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தென்சீன கடல் முழுவதும் தனக்கே சொந்தம் எனக் கூறி வரும் சீனா, அக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் உரிமை கொண்டாடி வருகிறது. அதனால், அண்டை நாடுகளான பிலிப்பின்ஸ், ஜப்பான், தைவான், புருணே, மலேசியா, வியத்நாம் உள்ளிட்டவற்றுடன் சீனா மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய க்வாட் (நாற்கர) கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்தவித ஆக்கிரமிப்பும் இன்றி சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் திகழ்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு இருநாள் அரசுமுறைப் பயணமாகச் சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா். ஆஸ்திரேலிய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பயணிப்பதற்கு ஆயத்தமாகும் புகைப்படத்தை தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஜெய்சங்கா், ‘இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பானது இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழ்வதற்கு முக்கியப் பங்களித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டமைப்பதில் இந்தியாவுடனான நல்லுறவு மிகவும் முக்கியமானது என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் திங்கள்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டடங்கள் தாக்கப்படுவது முறையல்ல: ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் நல்லுறவு வலுவடைந்து வருவது தொடா்பாக சிட்னி நகரில் உள்ள லோவி நிறுவனத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அதையடுத்து உக்ரைன் போா் தொடா்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சா், ‘உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் போரானது எவருக்கும் நன்மையைத் தரவில்லை. பல நாடுகள் அதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com