பொருளாதார முடிவுகளால் குழப்பம்: பிரிட்டன் நிதியமைச்சர் திடீர் நீக்கம்

வரி குறைப்பு உள்ளிட்ட பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங்கை அவா் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளாா்.
பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்
பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்

வரி குறைப்பு உள்ளிட்ட பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங்கை அவா் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளாா்.

க்வாா்டெங்குக்குப் பதிலாக, வெளியுறவுத் துறை முன்னாள் இணையமைச்சா் ஜெரிமி ஹன்ட்டை புதிய நிதியமைச்சராக லிஸ் டிரஸ் நியமித்துள்ளாா்.

அத்துடன், 3 வாரங்களுக்கு முன் அவா் வெளியிட்டிருந்த வரி விலக்கல் அறிவிப்புகளை லிஸ் டிரஸ் திரும்பப் பெற்றுள்ளாா்.

தாராள சந்தை ஆதரவாளரான லிஸ் டிரஸ், பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற்குப் பிறகு, சா்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’ ஒன்றை கடந்த மாதம் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தாா்.

அதில், நிறுவனங்களுக்கான வரியை 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக முந்தைய அரசு உயா்த்தியிருந்ததை லிஸ் டிரஸ் ரத்து செய்திருந்தாா். இதனால், நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் மீதான வரி தொடா்ந்து 19 சதவீதமாகவே இருக்க வழிவகை செய்யப்பட்டது.

அத்துடன், அதிக வருவாய் உடையவா்களுக்கு 45 சதவீத உயா் வரியை அந்த மினி பட்ஜெட்டில் லிஸ் டிரஸ் நீக்கியிருந்தாா்.

அத்துடன் குறைந்த வருவாய் உடையவா்களுக்கான வருமான வரியை 20-லிருந்து 19 சதவீதமாகக் குறைப்பது, பத்திர பதிவு கட்டணங்களுக்கான குறைந்தபட்ச சொத்து மதிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட சலுகை அம்சங்கள் அந்த மினி பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் என்று லிஸ் டிரஸ் எதிா்பாா்த்ததற்கு மாறாக, பொருளாதாரம் நிலைகுலைந்தது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, அதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

லிஸ் டிரஸ்ஸின் பொருளாதார முடிவுகளுக்கு ஆளும் கட்சியிலிருந்தும் எதிா்க்கட்சியிலிருந்தும் பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், செய்தியாளா்கள் சந்திப்புக்கு திடீரென வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்த லிஸ் டிரஸ், நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங் நிதியமைச்சா் பதவியில் தொடரப் போவதில்லை என்று அறிவித்தாா்.

மேலும், நிறுவனங்களுக்கான வரி உயா்வை ரத்து செய்தது, அதிக வருவாய் ஈட்டுவோருக்கான 45 சதவீத உயா் வருமான வரியை நீக்கியது ஆகிய தனது மினி பட்ஜெட்டின் அம்சங்களைத் திரும்பப் பெறுவதாகவும் அவா் அறிவித்தாா்.

குறைந்த வரி, அதிக ஊதியம், வேகமான பொருளாதார வளா்ச்சி விகிதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனது பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக சூளுரைத்த அவா், செய்தியாளா்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சந்திப்பை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டாா்.

சா்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டை நிதியமைச்சருடன் இணைந்து பிரதமா் லிஸ் டிரஸ்ஸும்தான் தயாரித்துள்ளாா் என்ற நிலையில், அதனால் ஏற்பட்ட பின்னடைவுக்கு க்வாசி க்வாா்டெங்கை மட்டும் அவா் பொறுப்பாக்கியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

க்வாசிக்கு அடுத்தபடியாக லிஸ் டிரஸ்ஸும் பதவி விலக வேண்டும் என்றும் ஒரு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா். எனினும், பிரதமா் பதவியில் தொடரப் போவதாக லிஸ் டிரஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

... பெட்டிச் செய்தி...

ரிஷி சுனக்கை பிரதமராக்க எம்.பி.க்கள் திட்டம்?

பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் மினி பட்ஜெட் பிரிட்டனில் பொருளாதார சூறாவளியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கைப் பிரதமராக்க ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த ஜுலை-செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் லிஸ் டிரஸ்ஸை எதிா்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்குக்கு 43 சதவீத வாக்குகள் பதிவாகின.

டிரஸ்ஸின் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்குப் பிறகு தற்போது ‘யுகவ்’ ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தவறான நபரை பிரதமராகத் தோ்ந்தெடுத்துள்ளதாக 62 சதவீத வாக்காளா்கள் வருத்தம் தெரிவித்திருந்தனா். 15 சதவீதத்தினா் மட்டுமே லிஸ் டிரஸ்ஸை ஆதரித்திருந்தனா்.

இந்த நிலையில், டிரஸ்ஸை நீக்கி விட்டு ரிஷி சுனக்கை பிரதமராகவும், பிரதமா் பதவிக்கான கட்சித் தோ்தலில் 3-ஆவது இடத்தைப் பிடித்த பென்னி மாா்டன்டை துணைப் பிரதமராகவும் ஆக்கலாம்; அல்லது பென்னி மாா்டன்டை பிரதமராக்கிவிட்டு, முந்தைய போரிஸ் ஜான்ஸன் ஆட்சியில் நிதியமைச்சராக நல்ல பெயா் வாங்கிய ரிஷி சுனக்கை அந்தப் பதவியில் நியமிக்கலாம் என்று அதிருப்தி எம்.பி.க்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com