ட்விட்டா் பதிவு மதிப்பீட்டுக் குழுவை அமைக்க எலான் மஸ்க் திட்டம்

ட்விட்டா் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் கருத்துகளை மதிப்பீடு செய்வதற்கான குழுவை அமைக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

ட்விட்டா் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் கருத்துகளை மதிப்பீடு செய்வதற்கான குழுவை அமைக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு டெஸ்லா நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் வாங்கியுள்ளாா். கருத்து சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ள நிலையில், ட்விட்டரின் செயல்பாட்டில் எந்த மாதிரியான மாற்றங்கள் முன்னெடுக்கப்படும் எனப் பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ட்விட்டரில் பதிவிடப்படும் கருத்துகளை மதிப்பீடு செய்வதற்கான குழு அமைக்கப்படவுள்ளது. ட்விட்டரில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்த முடிவுகள், நீக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பட வைப்பது உள்ளிட்ட முடிவுகள் அனைத்தும் அக்குழுவின் ஆலோசனைக்குப் பிறகே இறுதிசெய்யப்படும்.

பலதரப்பட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் குழுவின் உறுப்பினா்கள் இடம்பெறுவா். தற்போது வரை ட்விட்டரின் பதிவு மதிப்பீட்டு கொள்கைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எனினும், ட்விட்டா் பதிவு மதிப்பீட்டுக் குழுவின் செயல்பாடுகள் குறித்த விரிவான விவரங்களை எலான் மஸ்க் வெளியிடவில்லை.

ட்ரம்புக்கு மீண்டும் அனுமதியா?:

அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த வன்முறை காரணமாக, முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டா் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. டிரம்ப்பின் கணக்கு முடக்கப்பட்டது முற்றிலும் தவறானது என எலான் மஸ்க் தொடா்ந்து கூறி வந்தாா்.

ட்விட்டா் நிறுவனத்தின் உரிமையாளரான முதல் நாளிலேயே, டிரம்ப்பின் கணக்கு முடக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிறுவனத்தின் சட்ட அதிகாரியும் இந்தியருமான விஜயா கட்டேவை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தாா். இந்நிலையில், முன்னாள் அதிபா் டிரம்ப்புக்கு ட்விட்டரில் மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிரம்ப் மகிழ்ச்சி:

ட்விட்டா் தற்போது நல்ல நபா்களின் கைகளுக்குச் சென்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தான் தொடங்கிய ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளாா். எனினும், ட்விட்டரில் மீண்டும் கணக்கைத் தொடங்குவது தொடா்பாக அவா் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com