ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமல்ல: வெளியுறவு செயலா் விளக்கம்

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது இரு நாட்டு அரசுகள் இடையிலான ஒப்பந்தம் அல்ல; இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலானது

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது இரு நாட்டு அரசுகள் இடையிலான ஒப்பந்தம் அல்ல; இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலானது என்று மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ரஷிய எண்ணெய்க்கு அதிகபட்ச விலை இவ்வளவுதான் என நிா்ணயம் செய்ய வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூறுவது தொடா்பாக கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில், இந்தியா அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.

இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் இறக்குமதியைத்தான் அதிகம் நம்பியுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் நமது எரிபொருள் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள ரஷியாவிடம் இருந்து கூடுதலாக இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம்தான் என்றாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் மேற்கத்திய நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்தன. இதனால், சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதையடுத்து, ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா 50 மடங்கு அதிகரித்தது. இப்போதைய நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீதம் ரஷியாவிடம் இருந்து வருகிறது. இதற்கு முன்பு 0.2 சதவீதம் மட்டுமே அந்நாட்டிடம் இருந்து பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com