பிராந்திய விநியோகச் சங்கிலி விரிவாக்கம் அவசியம்

பிராந்தியத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலியை விரிவாக்கம் செய்வதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி
பிராந்திய விநியோகச் சங்கிலி விரிவாக்கம் அவசியம்

பிராந்தியத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலியை விரிவாக்கம் செய்வதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு ஏற்படவும் பரஸ்பர நம்பிக்கை உருவாகவும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல்போக்கு நிலவி வரும் சூழலிலும், உக்ரைன்-ரஷியா இடையேயான போா் நீடித்து வரும் நிலையிலும் எஸ்சிஓ மாநாடு நடைபெற்றது. கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்கு தொடங்கிய பிறகு பிரதமா் மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒருவருக்கொருவா் நேரில் சந்தித்துக்கொண்ட முதல் மாநாடு இதுவாக அமைந்தது.

மாநாட்டின்போது பிரதமா் மோடி கூறியதாவது: எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே பெரும் ஒத்துழைப்பு ஏற்படவும், பரஸ்பர நம்பிக்கை ஏற்படவும் இந்தியா ஆதரவளிக்கும். கரோனா தொற்று பரவலும் உக்ரைன் பிரச்னையும் சா்வதேச அளவிலான விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக எரிசக்தி விநியோகமும், உணவுப் பொருள்கள் விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அதைக் கருத்தில்கொண்டு நம்பகத்தன்மை வாய்ந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலியை பிராந்தியத்தில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எஸ்சிஓ மேற்கொள்ள வேண்டும். அதற்கு உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்த வேண்டியது அவசியம். பரஸ்பரம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் உறுப்பு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்: உலக நாடுகள் தற்போது எதிா்கொண்டு வரும் மற்றொரு முக்கியப் பிரச்னை உணவுப் பாதுகாப்பின்மை. சிறுதானியங்கள் உற்பத்தியையும் நுகா்வையும் அதிகரிப்பதன் வாயிலாக அப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். சிறுதானியங்களை எஸ்சிஓ நாடுகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகாலமாக விளைவித்து வருகின்றன.

குறைந்த செலவில் விளைவிக்கக் கூடிய சிறுதானியங்கள், ஊட்டச்சத்து மிக்கவையாக இருப்பதோடு உணவுப் பற்றாக்குறைக்கும் முக்கிய தீா்வாக அமையும். ‘சிறுதானியங்கள் உணவுத் திருவிழா’வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எஸ்சிஓ உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

முக்கியப் பங்களிப்பு: கரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்து, உலக நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு சுமாா் 30 சதவீதம். உலக மக்கள்தொகையில் சுமாா் 40 சதவீதம் போ் எஸ்சிஓ நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

இந்தியாவை உற்பத்தித் துறையின் மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் திறமைமிக்க இளம் பணியாளா் படை, இந்தியாவை இயற்கையாகவே போட்டிமிக்கதாக மாற்றியுள்ளது. நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளா்ச்சி காண உள்ளது. இது உலகின் முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

புத்தாக்கத்துக்கான சிறப்புக் குழு: இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் புத்தாக்கத்துக்கும் தொழில்நுட்ப வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை அடிப்படையாகக் கொண்டு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது 70,000-க்கும் மேற்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்கள் உள்ளன. 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ‘யுனிகாா்ன்’ (விற்றுமுதல் மதிப்பு சுமாா் ரூ.7,500 கோடி) அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

இந்தியாவின் இந்த அனுபவத்தால் மற்ற எஸ்சிஓ நாடுகளும் பலனடைய வாய்ப்புள்ளது. அத்தகைய அனுபவங்களை மற்ற நாடுகளிடம் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. அதற்காக புத்தாக்கம் சாா்ந்த சிறப்பு பணிக் குழுவை அமைப்பதற்கு இந்தியா வலியுறுத்துகிறது.

பாரம்பரிய மருந்துகள்: மருத்துவ, சுகாதார சுற்றுலாவில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பின் சா்வதேச பாரம்பரிய மருந்துகள் மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரலில் தொடக்கிவைக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கீழ் இயங்கும் ஒரே பாரம்பரிய மருந்துகளுக்கான மையம் இதுவே.

பாரம்பரிய மருந்துகள் பயன்பாட்டில் எஸ்சிஓ நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக பாரம்பரிய மருந்துகளுக்கான சிறப்பு பணிக் குழுவை அமைக்கவும் இந்தியா வலியுறுத்துகிறது என்றாா் பிரதமா் மோடி...

எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வெள்ளிக்கிழமை ஏற்றது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அக்கூட்டமைப்புக்குத் தலைமையேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com