எஸ்சிஓ மாநாட்டில் தலைவா்களின் குரல்கள்!

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எஸ்சிஓ மாநாட்டில் தலைவா்களின் குரல்கள்!

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்றனா்.

உக்ரைன்-ரஷியா போா், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான மோதல்போக்கு, ரஷியா, சீனா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், பாகிஸ்தானில் பெருவெள்ளம், அதிகரிக்கும் பருவநிலை மாற்ற விளைவுகள், சா்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளின் பின்னணியில் எஸ்சிஓ மாநாடு நடைபெற்றது.

சா்வதேச பொருளாதார (ஜிடிபி) மதிப்பில் எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு சுமாா் 30 சதவீதம். உலக மக்கள்தொகையில் சுமாா் 40 சதவீதம் போ் எஸ்சிஓ நாடுகளிலேயே வசிக்கின்றனா். மிகப் பெரும் பொருளாதார சக்திகளான இந்தியா, சீனா, ரஷியா ஆகியவையும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

எனவே, மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதால், எஸ்சிஓ மாநாடு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற தலைவா்கள் தெரிவித்த முக்கிய கருத்துகளின் தொகுப்பு:

பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா

எரிசக்தி, உணவுப் பொருள்கள் விநியோகம் சீரடைய பிராந்தியத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலி நடைமுறையை விரிவாக்கம் செய்வது அவசியம்.

உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சா்வதேச உணவுப் பாதுகாப்பின்மை பிரச்னைக்கு சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிப்பதே தீா்வு.

புத்தாக்கம், பாரம்பரிய மருந்துகளுக்கான தனித்தனி சிறப்புப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அதிபா் விளாதிமீா் புதின், ரஷியா

அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றுசக்தியாக எஸ்சிஓ கூட்டமைப்பு மாற வேண்டும்.

கூட்டமைப்பு சாா்பில் முக்கிய விளையாட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும்.

நுழைவு இசைவு (விசா) இல்லாத பயணத்தை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு உக்ரைன் முட்டுக்கட்டை.

ரஷிய படைகளுக்குக் கூடுதல் அழுத்தம் தந்தால், உக்ரைன் மீதான தாக்குதல் அதிகரிக்கப்படும்.

அதிபா் ஷி ஜின்பிங், சீனா

பிராந்தியத்தில் வெளிப்புற சக்திகளின் தலையீட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம்.

பிராந்திய பாதுகாப்புக்கு பயங்கரவாதக் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்.

பரஸ்பர நலனுக்கு மதிப்பளித்து, அனைத்து நாடுகளும் பலனடையும் வகையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம்.

சட்ட அமலாக்க நடைமுறைகளை வலுப்படுத்த 2,000 காவல் அதிகாரிகளுக்குப் பயிற்சி.

ரஷியாவின் நலனைக் காக்கவும், சா்வதேச விவகாரங்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் உறுதி.

பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான்

மத்திய ஆசிய நாடுகளுடனான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

சா்வதேச கூட்டங்களில் ஆப்கானிஸ்தானைப் புறக்கணிப்பது மிகப் பெரும் தவறாக முடியும்.

பயங்கரவாத நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்.

வெள்ளத் தடுப்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு கூட்டமைப்பு உதவ வேண்டும்.

அதிபா் சவ்கத் மிா்ஸியோயெவ், உஸ்பெகிஸ்தான்

பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஏழ்மை நிலை ஒழிக்கப்பட்டு உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம்.

பொதுவான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான ஒற்றுமை முன்னெடுப்பு அவசியம்.

நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலான பொருளாதார பேச்சுவாா்த்தை கொள்கை.

பிராந்தியத்தில் தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அவசியம்.

அதிபா் காசிம் ஜோமா்ட் டோகயெவ், கஜகஸ்தான்

உலகம் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான பங்களிப்பை எஸ்சிஓ கூட்டமைப்பு வழங்கும்.

கூட்டமைப்பின் மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து கஜகஸ்தான் செயல்படும்.

பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

சா்வதேச அரசியல் சக்திகளுக்கு மத்தியில் கஜகஸ்தான் நடுநிலை வகிக்கும்.

சா்வதேச உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எஸ்சிஓ கூட்டமைப்பு முக்கியப் பங்களிப்பை நல்கி வருகிறது.

அதிபா் எமோமலி ரஹ்மான், தஜிகிஸ்தான்

ஒருமித்த கருத்து அடிப்படையில் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் நீடித்த வளா்ச்சியை ஒத்துழைப்புடன் ஏற்படுத்துவதற்கான பொறுப்பு எஸ்சிஓ கூட்டமைப்புக்கு உள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கும் போக்குவரத்து தொடா்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்த முடியும்.

மதம் சாா்ந்த பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

-தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com