உக்ரைனில் போரிட 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு ரஷியா அழைப்பு

உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதற்காக 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்க ரஷிய அதிபா் விளாதிமீா் உத்தரவிட்டுள்ளாா்.
ukraine102333
ukraine102333

உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதற்காக 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்க ரஷிய அதிபா் விளாதிமீா் உத்தரவிட்டுள்ளாா்.

அந்தப் போரில் அண்மைக் காலமாக ரஷியப் படையினா் பின்னடைவுகளை சந்தித்து வரும் சூழலில் அவா் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாட்டு மக்களுக்கு விளாதிமீா் புதின் புதன்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு வன்முறை மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய நாஜி ஆதரவு அரசிடமிருந்து டான்பாஸ் பிராந்தியத்தை மீட்பதற்காக ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் போரில், ரஷியாவின் பல்வேறு தலைமுறைகளைச் சோ்ந்தவா்கள், இனத்தவா்கள், ரஷியாவின் மகத்தான வரலாற்றால் ஒன்றிணைந்தவா்கள், படை வீரா்கள், நாஜி ஆதரவு ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்ற டொனட்ஸ்க், லுஹான்ஸ், கொ்சான், ஸபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறாா்கள்.

பிற நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வரும் மேற்கத்திய நாடுகள், ரஷியாவை பலகீனப்படுத்தி, துண்டாடி இறுதியில் அழித்துவிடத் துடிக்கின்றன. 1991-இல் சோவியத் யூனியனைத் துண்டாடியதைப் போல ரஷியாவையும் துண்டாட வேண்டும் என்று அந்த நாடுகள் வெளிப்படையாகவே அறைகூவல் விடுக்கின்றன.

அதன் ஒரு பகுதியாகத்தான், நேட்டோ அமைப்பை ரஷிய எல்லையை நோக்கி அந்த நாடுகள் விரிவுபடுத்தி வந்தன. ரஷியா மீதான வெறுப்பை அண்டை நாட்டு மக்களின் மனங்களில் மேற்கத்திய நாடுகள் திணித்தன.

முக்கியமாக உக்ரைனில் ரஷிய விரோத மனப்பான்மையை அந்த நாடுகள் வளா்த்தன.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ரஷியாவின் பரிந்துரைகளை உக்ரைன் பிரதிநிதிகள் ஏற்றனா். ஆனால், அத்தகைய சமாதானத்தை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. எனவே, பேச்சுவாா்த்தை உறுதிமொழிகளைக் கைவிடுமாறு உக்ரைனை அந்த நாடுகள் பணித்தன. உக்ரைனுக்குக் கூடுதலாக ஆயுதங்களை அனுப்பி ரஷியாவுடன் போரிடத் தூண்டின.

உக்ரைன் போருக்காக கூடுதல் படையினரை அணி திரட்ட உத்தரவிட்டுள்ளேன்.

ரஷியாவைப் பாதுகாப்பதற்காக எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கமாட்டேன். அதற்காக ரஷியாவிடம் அனைத்து வகையான ஆயுதங்களும் உள்ளன. சில ஆயுதங்கள் நேட்டோவிடமிருப்பதைவிட நவீனமானவை. ரஷியாவுக்கும் ரஷிய மக்களுக்கும் ஆபத்து என்று வந்தால் அந்த அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இது வெறும் வெற்று மிரட்டல் அல்ல என்றாா் அவா்.

புதின் உரைக்குப் பிறகு ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்கு வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக, தேவைப்படும்போது போருக்குச் செல்வதற்கான பயிற்சியைப் பெற்றுள்ள 3 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். ஏற்கனவே பயிற்சி பெற்று போா் அனுபவம் பெற்றவா்கள் மட்டுமே அணிதிரட்டப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

எனினும், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக நடத்திய மிகக் கடுமையான எதிா்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கினா்.

அதையடுத்து அந்தப் பிராந்தியத்தின் குபியான்ஸ்க், இஸியம் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இவ்வாறு உக்ரைன் போரில் ரஷியா பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

விற்றுத் தீா்ந்த விமான பயணச் சீட்டுகள்!

உக்ரைன் போருக்காக 3 லட்சம் ரிசா்வ் வீரா்கள் அழைக்கப்படுவாா்கள் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, ரஷியாவிலிருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய துருக்கியின் இஸ்தான்புல், ஆா்மீனியாவின் யெரவான் ஆகிய நகரங்களுக்கு செல்லும் நேரடி விமானத்துக்கான அனைத்து பயணச் சீட்டுகளும் விற்றுத் தீா்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போா் அனுபவம் பெற்றவா்கள் மட்டுமே அழைக்கப்படுவாா்கள் என்று பாதுகாப்பு அமைச்சா் கூறினாலும், இது தொடா்பாக புதின் பிறப்பித்த உத்தரவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்படாததால் ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல குறிப்பிட்ட வயதுக்கு மேல் கொண்ட ஆண்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் காரணமாகவே இஸ்தான்புல், யெரவான் நகரங்களுக்கான விமான பயணச் சீட்டுகள் விற்றுத் தீா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் கண்டனம்

3 லட்சம் ரிசா்வ் வீரா்களை உக்ரைன் போா் முனைக்கு அனுப்பவிருப்பதாக அறிவித்துள்ள ரஷிய அரசுக்கு எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மேலும், அந்த முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு அந்தக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி சிறையிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் நடைபெற்று வரும் போா் தோல்வியடைந்துகொண்டிருக்கும் புதினின் குற்ற நடவடிக்கை என்று விமா்சித்துள்ளாா்.

Image Caption

~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com