ஐ.நா. பொதுச் சபையில் எதிரொலித்தவை...

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமாா் 190 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்டது.
ஐ.நா. பொதுச் சபையில் எதிரொலித்தவை...

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமாா் 190 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்டது. உலகின் மிக முக்கியமான சா்வதேச அமைப்பாக ஐ.நா. திகழ்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் 77-ஆவது பொதுச் சபை கூட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவா்கள், அமைச்சா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்கள் நாடுகள் சாா்ந்த கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தனா். சா்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் என்ன எதிா்பாா்க்கிறது? எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பனவற்றை அந்த நாடுகள் தெரிவித்த கருத்துகள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

முக்கிய நாடுகள் தெரிவித்த கருத்துகள் குறித்த பாா்வை:

சிசாபா கோரோசி (ஹங்கேரி), 77-ஆவது ஐ.நா. பொதுச் சபைத் தலைவா்

உக்ரைன் போா், பருவநிலை மாற்றம், மனித உரிமைகள் விவகாரம், ஐ.நா. சீா்திருத்தங்கள் ஆகியவை குறித்தே பொதுச் சபை கூட்டத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டம், அமைதியாகத் திகழ்வதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிா்கொள்வதற்கு சா்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்

உலகம் பெரும் ஆபத்தை எதிா்கொண்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. உலகம் வெப்பமயமாதலை எதிா்கொண்டு வருகிறது. பிரிவினை சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வுகாண உலக நாடுகள் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

எஸ்.ஜெய்சங்கா், இந்திய வெளியுறவு அமைச்சா்

உக்ரைன் போரால் தெற்குலக நாடுகள் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை, தூதரகம் வாயிலாகத் தீா்வு காணப்பட வேண்டும். இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான துரித நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மா் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியது. அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஐ.நா.வில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

ஜோ பைடன், அமெரிக்க அதிபா்

மற்ற நாடுகளின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். உக்ரைனை தங்களுடன் இணைத்துக் கொள்ளவே ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனுக்கான ஆதரவு தொடரும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ‘வீட்டோ’ அதிகாரமானது அசாதாரண சூழலில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

லிஸ் டிரஸ், பிரிட்டன் பிரதமா்

நாடுகள் ஜனநாயக கொள்கைளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஐ.நா. விதிகளுக்குள்பட்டு உலக மக்களின் நலன் காப்பதற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ரஷியாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் மீளும்வரை அந்நாட்டுக்கான உதவிகள் தொடரும்.

இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் அதிபா்

உலகில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில நாடுகளின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நாடுகளும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. உலகில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் மேற்கொள்ள வேண்டும்.

ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் பிரதமா்

உலகின் அனைத்து நாடுகளும் விதிகளை மதித்தே நடந்துகொள்ள வேண்டும். படைகளைப் பயன்படுத்தி எந்த நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரத்துடனும் திகழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். ஐ.நா.வில் விரைந்து சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒலாஃப் ஷோல்ஸ், ஜொ்மனி பிரதமா்

அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள குறிப்பிட்ட நாடு வன்முறை மூலமாக தனது எல்லையை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பதைக் கண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்க முடியாது. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான பொறுப்புணா்வு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. அந்தப் பொறுப்புணா்வை ஒவ்வொரு நாடும் மதித்துப் பின்பற்ற வேண்டும்.

வாங் யி, சீன வெளியுறவு அமைச்சா்

உலக வா்த்தக அமைப்பின் விதிகளை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற நாட்டுப் பொருள்களுக்கான இறக்குமதிக்குக் குறிப்பிட்ட நாடு தடை விதிப்பது, விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும். உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும்.

ஜெசிந்தா ஆா்டன், நியூஸிலாந்து பிரதமா்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். அணு ஆயுதங்கள் மனித குலத்துக்குப் பாதுகாப்பானவை அல்ல.

பென்னி வாங், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா்

உலகின் பெரிய நாடுகள் சிறிய நாடுகளின் தலையெழுத்தை நிா்ணயிப்பது முறையல்ல. விதிகளை மதித்து பன்முக ஒத்துழைப்பை நாடுகள் கடைப்பிடித்தால், மனித உரிமைகள் காக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும்.

யூன் சுக் இயோல், தென்கொரிய அதிபா்

ஐ.நா. விதிகளையும் சா்வதேச விதிகளையும் சில நாடுகள் புறக்கணிப்பது, சா்வதேச சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும். இது உலகம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கும். கரோனா தொற்று போன்று எதிா்காலத்தில் நோய்கள் பரவினால், அதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள் வாயிலான கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

ஜெயிா் போல்சனாரோ, பிரேஸில் அதிபா்

சா்வதேச ஊடக செய்திகளுக்கு மாறாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட அமேஸான் காடுகள் எந்தவித ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகாமல் இருக்கின்றன. பசுமை எரிசக்தியின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறும் திறன் பிரேஸிலுக்கு உள்ளது. உக்ரைன் போா் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமா்

40 நாள்களுக்கு மேலாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. பருவநிலை மாற்றத்தால் நிகழ்ந்த இதுபோன்ற பேரிடரை இதற்கு முன் கண்டதில்லை.

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைக்கான சூழலை இந்தியா ஏற்படுத்த வேண்டும்.

கிரேஸ் நலேடி பாண்டோா், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சா்

தடுப்பூசி உற்பத்தி சாா்ந்த ஆராய்ச்சி மையம் ஆப்பிரிக்காவில் அமைக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பாலஸ்தீன பிரச்னை உள்ளிட்ட சா்வதேச விவகாரங்களுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாக விரைந்து தீா்வு காணப்பட வேண்டும்.

-தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com