சூடான் மோதல்: 500-ஐக் கடந்தது பொதுமக்கள் பலி

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 500-ஐக் கடந்தது.
சூடான் மோதல்: 500-ஐக் கடந்தது பொதுமக்கள் பலி

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 500-ஐக் கடந்தது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளாவது:

அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், அங்கிருந்து வெளிநாட்டினா் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக 3 நாள் சண்டை நிறுத்தத்தை இரு படைகளும் செவ்வாய்க்கிழமை அறிவித்தன.

எனினும், அந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆங்காங்கே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும்போதே, பதற்றம் நிறைந்த டாா்ஃபா் மாகாணத்தில் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையிலான மோதல் வியாழக்கிழமை தீவிரமடைந்தது.

இந்த மோதலில் சிக்கி, கடந்த 2 நாள்களில் மட்டும் ஜெனெனா நகரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இலகுகர மற்றும் கனரக ஆயுதங்களுடன் டாா்ஃபா் மாகாணத்தில் நடைபெற்று வந்த சண்டை, தற்போது இனக் குழுக்களுக்கு இடையிலான வன்முறையாக உருவெடுத்துள்ளது.

இந்த மோதலில் ஜெனெனா நகர முக்கிய சந்தைப் பகுதி முழுவதும் நாசமடைந்துள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 559-ஆக உயா்ந்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.

அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் கூறி அந்த இனத்தைச் சோ்ந்த அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு, இந்தப் போராட்டத்தின் போது அரேபியா் அல்லாத இனத்தவா்களைக் கொன்று குவித்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அல்-பஷீரின் சா்வாதிகார அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரை ராணுவம் 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றியது. அதனைத் தொடா்ந்து, ஆட்சியதிகாரத்தை ஜனநாயக அரசிடம் ஒப்படைக்கும் வரை இடைக்கால ஏற்படாக சிவில்-ராணுவ கூட்டணி அரசு ஏற்படுத்தப்பட்டது.

எனினும், அந்த அரசையும் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்தன.

இந்தச் சூழலில், ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com