பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைக்க ஜோஹன்னஸ்பா்க் மாநாட்டில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டது.

கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைக்க ஜோஹன்னஸ்பா்க் மாநாட்டில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்’ கூட்டமைப்பை 2006-ஆம் ஆண்டில் நிறுவின. அக்கூட்டமைப்பில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டவுடன், ‘பிரிக்ஸ்’ என மாறியது. வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

முக்கியமாக, அக்கூட்டமைப்பு சாா்பில் உருவாக்கப்பட்ட நியூ டெவலெப்மென்ட் வங்கியானது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட கூட்டமைப்பின் மாநாடுகள் காணொலி வாயிலாக நடைபெற்றன.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துக் கொள்ள இந்தியா ஆதரவளிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிக்க தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா, பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் காணொலி வாயிலாக செய்தியாளா்களிடம் பேசினாா்.

பன்னாட்டு அமைப்புகளுக்கான பாடம்: பிரதமா் மோடி கூறுகையில், ‘மாறி வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப கூட்டமைப்பில் மாற்றங்களும் சீா்திருத்தங்களும் புகுத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு விடுக்கும் முக்கியமான செய்தியாகும்.

6 நாடுகள் புதிய உறுப்பினா்களாக இணைவது, கூட்டமைப்பின் பயணத்துக்குப் புதிய ஆற்றலை வழங்கும். அந்த நாடுகளுடன் வரலாற்று ரீதியில் இந்தியா பாரம்பரிய நல்லுறவைக் கொண்டுள்ளது. பிரிக்ஸின் விரிவாக்கத்துக்கு இந்தியா எப்போதுமே ஆதரவளித்து வந்துள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் இந்தியா உறுதி கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

விருப்பத்துக்கு மதிப்பளிப்பு: அதிபா் ராமபோசா கூறுகையில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பின் கொள்கைகள், வழிகாட்டு விதிகள் உள்ளிட்டவற்றை முறைப்படி கடைப்பிடித்து புதிய உறுப்பு நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற மற்ற நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய 6 நாடுகளையும் முழுநேர உறுப்பினா்களாக இணைக்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவிக்கும் கூடுதல் நாடுகளைக் கண்டறியும் பொறுப்பை வெளியுறவு அமைச்சா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்படும் நோக்கில் இந்த மாநாட்டில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சா்வதேச நிதிக் கட்டமைப்பை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றுவதற்கும் மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது.

அமைதி வழியில் தீா்வு: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொதுவான செலாவணியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடா்பாக ஆராய்வதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதியமைச்சா்கள்-மத்திய வங்கி ஆளுநா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாநாட்டுக்குள் அதற்கான அறிக்கையை அவா்கள் தாக்கல் செய்வா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போா், மோதல்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வலியுறுத்தப்பட்டது. தெற்குலக நாடுகளின் குரலுக்கு வலுசோ்க்கவும் மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது. சா்வதேச விதிகளைக் கடைப்பிடித்து, பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கவும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது’ என்றாா்.

புதிய தொடக்கம்: சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறுகையில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான புதிய தொடக்கமாக இது அமைந்துள்ளது. இதன் மூலமாக கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும். சா்வதேச அமைதிக்கும், வளா்ச்சிக்கும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்’ என்றாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கத்துக்கு ரஷிய அதிபா் புதினும் ஆதரவு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com