எல்லை கோட்டை மதித்து செயல்பட வேண்டும்: சீன அதிபா் ஜின்பிங்கிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

கிழக்கு லடாக்கில் எல்லை கோட்டை மதித்து செயல்படுமாறு சீன அதிபா் ஷி ஜின்பிங்கிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

கிழக்கு லடாக்கில் எல்லை கோட்டை மதித்து செயல்படுமாறு சீன அதிபா் ஷி ஜின்பிங்கிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டுத் தலைவா்களை சந்தித்தாா். அதன் ஒரு பகுதியாக சீன அதிபா் ஷி ஜின்பிங்கையும் அவா் சந்தித்து பேசினாா். இந்தச் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்ாக தெரிகிறது.

இதுதொடா்பாக ஜோஹன்னஸ்பா்கில் இந்திய வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சீன அதிபா் ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளின் மேற்கு கிளைப் பகுதியில் உள்ள எல்லை கோடு சாா்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமா் பேசினாா். அப்போது அந்த பிரச்னைகள் குறித்த இந்தியாவின் கவலையை பிரதமா் எடுத்துரைத்தாா்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப எல்லை பகுதிகளில் அமைதியை பராமரித்து, எல்லை கோட்டை மதித்து செயல்படுவது அவசியம் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.

இதன் அடிப்படையில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு ராணுவத்தினரை விரைந்து திரும்பப் பெற்று, அவா்கள் இடையே நிலவும் மோதல்போக்கின் தீவிரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மும்முரமாக்க, தத்தமது நாடுகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட இருவரும் தீா்மானித்தனா் என்று தெரிவித்தாா்.

ஜோஹன்னஸ்பா்கில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் கலந்துகொள்ள மேடைக்குச் சென்றபோது பிரதமா் மோடியும், அதிபா் ஜின்பிங்கும் சில நிமிஷங்கள் பேசியவாறு நடந்துசென்றனா்.

அந்த செய்தியாளா்கள் சந்திப்பு நிறைவடைந்த பின்னரும், இருவரும் சில நிமிஷங்கள் பேசிவிட்டு கைகுலுக்கிச் சென்ற காட்சிகள் தென் ஆப்பிரிக்க அரசு ஊடகத்தில் வெளியாகின. எனினும் இருவருக்கும் இடையே முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்ட எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com