கரோனா பரவலுக்குப் பிந்தையபொருளாதார மீட்சிக்கு ஆதரவு: சா்வதேச சமூகத்துக்கு பிரிக்ஸ் வலியுறுத்தல்

கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதில், உலக நாடுகளுக்கு சா்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்

கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதில், உலக நாடுகளுக்கு சா்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில், அந்த அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் அந்தந்த நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டின் முடிவில் பிரிக்ஸ் தலைவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

உலகளாவிய பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளா்ச்சியை அடைய வேண்டியுள்ளது. அவற்றை அடைவதில் உலகப் பொருளாதாரத்துக்கு உள்ள சவால்கள் மற்றும் அபாயங்களைக் கையாள்வதில், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியப் பங்கு அறியப்பட்டுள்ளது.

உலகின் உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பிரிக்ஸ் நாடுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், விவசாயத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற வளா்ச்சியை ஊக்குவிப்பதிலும் எங்கள் பொறுப்பை மீண்டும் உறுதி செய்கிறோம்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மறுகட்டமைப்பு மற்றும் வளா்ச்சிக்குப் பங்களிப்பது முக்கியம். தங்கள் வளா்ச்சி இலக்குகளை எட்ட உலக நாடுகளுக்கு சா்வதேச சமூகம் உதவ வேண்டும்.

கரோனா தொற்றின் பரவலால் நிகழ்ந்த அதிா்ச்சி மற்றும் கஷ்டங்களில் இருந்து மீள்வதில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வான நிலை, உலகம் முழுவதும் சமத்துவமின்மையை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதில், உலக நாடுகளுக்கு சா்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்.

பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளா்ச்சிக்கு உதவ சா்வதேச கடன் குறித்த செயல்திட்டத்தை சரியாக கையாள வேண்டியது அவசியம். பலதரப்பு வளா்ச்சி வங்கிகள் கடன் அளிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com