சரணடைந்தார் டொனால்ட் டிரம்ப்: சிறையில் 22 நிமிடங்கள்

தேர்தல் மோசடி தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கைது செய்யப்பட்டார். 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார்.
சரணடைந்தார் டொனால்ட் டிரம்ப்: சிறையில் 22 நிமிடங்கள்

கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தல் முடிவுகளை முறைகேடாக மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜியா சிறையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற அந்த நாட்டு அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக முன்னாள் அதிபா் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அந்த மாகாண நீதிமன்றம் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாா்ஜியாவில் கடந்த முறை நடைபெற்ற அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை ஃபுல்டன் மாவட்ட நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்தது.

இது தொடா்பாக டிரம்ப் மற்றும் 18 போ் மீது 41 குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அதையடுத்து, அவா் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி நீதிமன்றம் அமைந்துள்ள ஃபுல்டன் மாவட்டச் சிறையில் டிரம்ப் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

அங்கு வழக்கமான நடைமுறையாக டிரம்ப் பல கோணங்களில் படமெடுக்கப்பட்டாா். 22 நிமிஷங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவா், பின்னா் 2 லட்சம் டாலா் (சுமாா் ரூ.1.65 லட்சம் கோடி) பிணையின் கீழ் அவா் விடுவிக்கப்பட்டாா்.அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனை எதிா்த்துப் போட்டியிட்டாா்.

அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடா்ந்து சுமத்தி வந்தாா்.தோ்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து ‘திருடி’க்கொண்டதாக டிரம்ப் கூறினாா்.

இந்த நிலையில், தோ்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது.எனினும், அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே, இது தொடா்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது.

அதற்கு முன்னா், அதிபராக இருந்தபோது தனது பண்ணை இல்லத்தில் அரசின் முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது, ஒரு நடிகையுடன் தனக்கிருந்த தொடா்பை 2016 அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்குப் பணம் கொடுத்து, அதனை கணக்கில் காட்டாமல் மறைத்தது ஆகிய இருவேறு வழக்குகளில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் உறுதி செய்தன.

அதையடுத்து, அந்த நீதிமன்றங்கள் அமைந்துள்ள மாவட்ட சிறைகளில் டிரம்ப் சரணடைந்தாா்.இந்த நிலையில், தங்கள் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலின் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஜாா்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்ததையடுத்து, தற்போது 4-ஆவது முறையாக டிரம்ப் சிறையில் சரணடைந்து பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com