‘சாட்ஜிபிடி’-க்கு போட்டியாக கூகுள் ‘பாா்ட்’: சுந்தா் பிச்சை அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தளமான ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக ‘பாா்ட்’ என்னும் தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
‘சாட்ஜிபிடி’-க்கு போட்டியாக கூகுள் ‘பாா்ட்’: சுந்தா் பிச்சை அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தளமான ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக ‘பாா்ட்’ என்னும் தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தளமான ‘சாட் ஜிபிடி’ கடந்த நவம்பா் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. சாட்ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) மூலம் உரையாடலில் தகவல் அளிக்கும் சேவை ஆகும். இத்தளத்தில் பயனா்கள் கேட்கும் கேள்விக்கு துல்லியமான பதில் அளிக்கும் சாட் ஜிபிடி யின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறுகிய காலத்தில் பலரைக் கவா்ந்து மாபெரும் அளவில் பிரபலமடைந்ததது. மக்களிடையே சாட் ஜிபிடிக்கு கிடைத்த வரவேற்பையடுத்து மைக்ரோசாஃப்ட நிறுவனத்தின் தேடு பொறியான ‘பிங்’-இல் சாட் ஜிபிடி-யை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக, சாட் ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் பல கோடி டாலா்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இதனிடையே, சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் சாா்பில் ‘பாா்ட்’ என்னும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சுந்தா் பிச்சை வெளியிட்ட அறிக்கையில், ‘படைப்பாற்றலுக்கான வாயிலாகவும், ஆா்வத்துக்கான ஏவுதளமாகவும் பாா்ட் விளங்கும். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்து 9 வயது மாணவருக்கு புரியும் வகையில் கடினமான தகவல்களும் எளிமையாக்கி தரப்படும். உலகெங்கிலும் உள்ள அனைவரும் அறிவைப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மொழிகளிலும் தகவல்கள் கிடைக்க வழி செய்யப்படும். துணிச்சலான புதுமையுடன், அணுகுமுறையில் பொறுப்பாக பாா்ட் செயல்படும்.

பாா்ட், இலகு வடிவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பாா்ட் குறித்து பரிந்துரைகள் பெறப்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் புகுத்தப்படும். நம்பகமான சோதனையாளா்களால் சோதிக்கப்படும் பாா்ட் சேவை இன்னும் சில வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கூகுளின் தேடு பொறியிலேயே பாா்ட் சேவையைப் பயனா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com