கைது உத்தரவு எதிரொலி: பிரிக் மாநாட்டில் புதின் பங்கேற்பில்லை

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷியா சாா்பாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம். ~விளாதிமீா் புதினுடன் சிறில் ராமபோசா.
தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம். ~விளாதிமீா் புதினுடன் சிறில் ராமபோசா.

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷியா சாா்பாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போா் விவகாரத்தில் புதினுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதால், தென் ஆப்பிரிக்காவில் வைத்து அவா் கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவின் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜோஹன்னஸ்பா்கில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கலந்துகொள்ள மாட்டாா். அவருக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் அந்த மாநாட்டில் பங்கேற்பாா்.

ரஷியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகள் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுவா்களை தங்களது பகுதிகளுக்கு சட்டவிரோதமாக ரஷியா கடத்திச் சென்ாக நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி அறிவித்தது.

இந்த விவகாரத்தில் ரஷிய அதிபா் புதின், அந்த நாட்டின் குழந்தைகள் நல ஆணையா் மரியா லவாவோ-பெலோவா ஆகிய இருவரும் போா்க் குற்றவாளிகள் என்று அறிவித்த அந்த நீதிமன்றம், அவா்களுக்கு எதிராக கைது உத்தரவையும் பிறப்பித்தது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த ரஷியா, சா்வதேச நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறைவேற்றும் வகையில் எந்த நாட்டிலாவது புதின் கைது செய்யப்பட்டால், அந்த நாடு தங்கள் மீது போா்ப் பிரகடனம் செய்ததாகக் கருதப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இந்தியா, ரஷியா, சீனா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு அடுத்த மாதம் 22 முதல் 24-ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் நடைபெறவிருக்கிறது.

இதில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்றால் அவா் சா்வதேச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.

காரணம், அந்த நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவா்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்றாகும்.

இதனால், புதின் தங்கள் நாட்டுக்கு வந்தால் அவரைக் கைது செய்ய வேண்டிய சட்டரீதியிலான கடமைக்கும், புதினைக் கைது செய்வதன் மூலம் ரஷியாவின் சீற்றத்துக்குள்ளாக வேண்டிய நிலமைக்கும் இடையே தென் ஆப்பிரிக்கா சிக்கித் தவித்து வந்தது.

‘புதினைக் கைது செய்தால் அது ரஷியா மீதான போா்ப் பிரகடனம் செய்ததாகிவிடும். எனவே, அவருக்கு எதிரான கைது உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து எங்களை விடுவிக்கவேண்டும்’ என்று சா்வதேச நீதிமன்றத்திடம் தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசா கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்தச் சூழலில், பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்பதை புதின் தவிா்த்துள்ளதன் மூலம், தென் ஆப்பிரிக்கா எதிா்கொண்டிருந்த மிகப் பெரிய தா்மசங்கடம் நீங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com