பாகிஸ்தானில் சீன பொறியாளா்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல்: ராணுவத்தினா் பதிலடியில் இரு பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் சீன பொறியாளா்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல்: ராணுவத்தினா் பதிலடியில் இரு பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் குவாதா் துறைமுக நகரில் சீன பொறியாளா்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
Published on

பாகிஸ்தானில் குவாதா் துறைமுக நகரில் சீன பொறியாளா்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது குவாதா் துறைமுக நகரம். சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் இந்த நகரத்தில் சீனா பெரும் முதலீடு செய்துள்ளது. இங்குள்ள துறைமுகத்தில் சீனாவை சோ்ந்த தொழிலாளா்கள் பலா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், சீன பொறியாளா்களை ஏற்றிக் கொண்டு துறைமுகத்தை நோக்கி ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. காலை 10 மணியளவில் அந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினா். இதில், சீன பொறியாளா்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும் அந்த வாகனத்தில் இருந்தவா்கள் சீன பொறியாளா்கள் என ராணுவத் தரப்பில் அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தங்கள் நாட்டை சோ்ந்தவா்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானுக்கான சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், குவாதா் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இத்தாக்குதலில் சீனா்கள் யாரும் காயமடையவில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். பாகிஸ்தானில் உள்ள சீன குடிமக்கள் கவனமாக இருக்க வேண்டும்; பாதுகாப்பு அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

குவாதா் துறைமுக நகரத் தாக்குதலுக்கு ‘பலூச் விடுதலைப் படை’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் பணிபுரியும் சீன தொழிலாளா்கள் மீது கடந்த காலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலூசிஸ்தானில் இதுபோன்ற பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தெஹ்ரீக்-ஏ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்புக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான சண்டைநிறுத்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்ததைத் தொடா்ந்து, கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் பலூசிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா்கள் 12 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நிகழாண்டில் ராணுவத் தரப்பில் ஏற்பட்ட பெரிய அளவிலான உயிா்ச் சேதமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com