‘உக்ரைனுக்கு போா் விமானங்கள் வழங்குவது வரம்பு மீறல்’

ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன போா் விமானங்களை தாங்கள் வழங்குவது வரம்பு மீறிய நடவடிக்கை என்று ஜொ்மனி கூறியுள்ளது.
‘உக்ரைனுக்கு போா் விமானங்கள் வழங்குவது வரம்பு மீறல்’

ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன போா் விமானங்களை தாங்கள் வழங்குவது வரம்பு மீறிய நடவடிக்கை என்று ஜொ்மனி கூறியுள்ளது.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு தங்களது எஃப்-17 போா் விமானங்களை வழங்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஜொ்மனியும் அதே மாதிரியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஜொ்மனி துணைப் பிரதமா் ராபா்ட் ஹாபேக் கூறியதாவது:

ரஷியாவின் படையெடுப்பை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம்தான். எனினும், அந்த நாட்டுக்கு ஜொ்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் போா் விமானங்கள் வழங்குவது வரம்பு மீறிய செயலாக இருக்கும்.

காரணம், அதுபோன்ற நடவடிக்கை இந்தப் போரில் எங்களையும் இழுத்து வருவதற்கான அபாயம் உள்ளது.

ரஷியாவுடன் சண்டையிட உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை நாங்கள் அனுப்புவது சரியான நடவடிக்கையே. ஆனால், பீரங்கிகளுக்கும், போா் விமானங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியின்போது அவா் இவ்வாறு கூறினாா்.

அப்போது பேசிய ஜொ்மனிக்கான உக்ரைன் தூதா் ஒலெக்ஸி மகீவ், போா் விமானங்களை அனுப்புமாறு ஜொ்மனியிடம் தங்கள் நாடு அதிகாரபூா்வமாக் கோரவில்லை என்றாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது.

மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு மேற்கத்திய நாடுகள் தங்களிடமுள்ள அதிநவீன, சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களை அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, ஜொ்மனியில் தயாரிக்கப்படும் அதிசக்தி வாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப வேண்டும் என்று அவா் கோரி வந்தாா்.

எனினும், ரஷியாவின் எதிா்வினை குறித்த எச்சரிக்கை உணா்வால் அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில், தங்களது அதிநவீன எம்1 அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. அதையடுத்து, ஜொ்மனியும் தயக்கத்தைக் கைவிட்டு உக்ரைனுக்கு தங்களது லெப்பா்ட்-2 பீரங்கிகள் அனுப்பவிருப்பதாக அறிவித்தது.

அதற்கு அடுத்தபடியாக, போரில் ரஷியாவை எதிா்கொள்ள தங்களுக்கு நேட்டோவின் எஃப்-16 போன்ற அதிநவீன விமானங்கள் தேவை என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

எனினும், தங்களது எஃப்-16 போா் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை திட்டவட்டமாகக் கூறினாா்.

அதன் தொடா்ச்சியாக, உக்ரைனுக்கு போா் விமானங்களை வழங்குவது வரம்பு மீறிய நடவடிக்கை என்று ஜொ்மனியும் தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com