சர்வதேச கல்வி நாள் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு: யுனெஸ்கோ அறிவிப்பு

ஜனவரி 24 சர்வதேச கல்வி நாள், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
சர்வதேச கல்வி நாள் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு: யுனெஸ்கோ அறிவிப்பு


நியூயார்க்: ஜனவரி 24 சர்வதேச கல்வி நாள், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கல்வி நாள் தொடர்பான தீர்மானம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையால் ஏற்கப்பட்டது. இதையடுத்து 2019 முதல் சர்வதேச கல்வி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐந்தாவது சர்வதேச கல்வி நாள் நாளை மறுநாள் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த நாளை ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அர்ப்பணிப்படுவதாக ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றம் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஆப்கன் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி திரும்ப வழங்கப்படுவதை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா. தலைமையகங்களில் அன்றைய நாள் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், ஐ.நா. பொதுச்செயலாளரும், ஐ.நா. பொதுச் சபையின் தலைவருமான ஆன்டனியோ குட்டரெஸ், யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மீண்டும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்ரே அசோலே தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: “உலகில் எந்த நாடும் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கக்கூடாது. கல்வி என்பது ஒரு சர்வதேச மனித உரிமை, அது மதிக்கப்பட வேண்டும், ”என்று இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே கூறினார்.

மேலும், அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். “ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மறுக்கப்பட்டுள்ள கல்வி உரிமைகள் உடனடியாக கிடைப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. பெண்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும், ”என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அதிகாரிகள் இளம் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் நுழைய தடை விதித்தனர்.

1990 - 2001 வரை ஆட்சி செய்த தலிபான்கள், ஆகஸ்ட் 2021 இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த சில மாதங்களுக்குப் பிறகு, பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதைத் தடைசெய்யும் முந்தைய உத்தரவை இது பின்பற்றியது.

இதன் விளைவாக, பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி கற்பதற்கான உரிமைகள் தடைசெய்யப்பட்டுள்ள உலகின் ஒரே நாடு ஆப்கானிஸ்தான்.

"படித்த பெண்கள் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாதவர்கள் என்பதால் நாடு எதிர்கால தலைமுறையை இழப்பதற்கான ஆபத்து உள்ளது." 

"ஆப்கானிஸ்தான் - அல்லது வேறு எந்த நாடும் - அதன் மக்கள்தொகையில் பாதி பேர் கல்வியைத் தொடரவும் பொது வாழ்க்கையில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படாவிட்டால் முன்னேற முடியாது." என்று யுனெஸ்கோ இந்த வார தொடக்கத்தில் கூறியது.

“அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு. ஆனால், ஆப்கானிஸ்தானில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான இந்த அடிப்படை உரிமையை பறித்துள்ளனர்” என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

2001 மற்றும் 2018 க்கு இடையில், யுனெஸ்கோவின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் அனைத்து கல்வி நிலைகளிலும் பத்து மடங்கு மாணவர் சேர்க்கையை பதிவு செய்துள்ளது.

ஆரம்பப் பள்ளிகளில் பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து 25 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2021க்குள், ஆரம்பப் பள்ளி மாணவர்களில் 10 பேரில் நான்கு பேர் இருந்தனர்.

உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 20 மடங்கு அதிகரித்துள்ளது: 2001 இல் 5,000 மாணவர்களில் இருந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1,00,000 ஆக அதிகரித்துள்ளது.

இன்று, பள்ளி செல்லும் வயதில் உள்ள 80 சதவீத பள்ளி வயது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு (சுமார் 25 லட்சம் சிறுமிகளுக்கு) பள்ளி செல்லவில்லை. உயர்கல்வி பெறும் வயதுள்ள பெண்கள் 12 லட்சம் பேருக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது.  டிசம்பரில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதற்கான உத்தரவு, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 1,00,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்து பெண் கல்விக்கு எதிரான; பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com