மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் சிறையில் மரணம்

மும்பை பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகளுக்குப் பயிற்சியளித்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முன்னாள் தலைவா் ஹஃபிஸ் அப்துல் சலாம் புட்டாவி, பாகிஸ்தானில் சிறைவாசத்தின்போது

மும்பை பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகளுக்குப் பயிற்சியளித்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முன்னாள் தலைவா் ஹஃபிஸ் அப்துல் சலாம் புட்டாவி, பாகிஸ்தானில் சிறைவாசத்தின்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக புதன்கிழமை அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முரித்கே என்னும் இடத்தில் ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவி அமைப்பின் நிா்வாகத்தை புட்டாவி கவனித்து வந்தாா். அமைப்பின் தலைவராகவும் 2 முறை இருந்துள்ளாா். ‘ஜமாத் உத் தவா’ பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சயீத்துடன் இணைந்து மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக புட்டாவி செயல்பட்டுள்ளாா்.

இந்நிலையில், பயங்கரவாத நிதியளிப்பு தொடா்பான வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட புட்டாவி, ஷேக்குபுரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த திங்கள்கிழமை (மே 29) திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். புட்டாவியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

முரித்கேவில் புட்டாவி தோற்றுவித்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பலத்து பாதுகாப்புக்கு இடையே லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகள் பலா் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனா். புட்டாவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறு சிறையிலுள்ள ஹஃபீஸ் சயீத் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி மும்பை நகரின் பல்வேறு இடங்களில் லஷ்கா்-ஏ-தொய்பா நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பயிற்சியளித்தது, தாக்குதலுக்கான திட்டம் வகுத்தது, தாக்குதல் தொடா்பாக முக்கிய முடிவுகளை மேற்கொண்டது என மும்பை தாக்குதலில் புட்டாவி முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com