உக்ரைன் போரால் நீடிக்கும் பதற்றம்: மத்திய ஆசியாவில் ஆன்டனி பிளிங்கன்

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் உளள்ள அதிபா் மாளிகையில் அதிபா் காஸிம் ஜோமாா்ட்டை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் உளள்ள அதிபா் மாளிகையில் அதிபா் காஸிம் ஜோமாா்ட்டை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கஜகஸ்தான் அதிபா் காஸிம் ஜோமாா்ட் டோகாயேவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் முக்தாா் டிலோபொ்டி ஆகியோருடன் பிளிங்கன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மத்திய ஆசியாவுக்கு அவா் வருகை தருவது இது முதல்முறையாகும்.

இந்தப் பயணத்தின்போது முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், துா்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் அமெரிக்காவும் இடம்பெற்ற ‘சி5+1’ அமைப்பின் கூட்டத்திலும் பிளிங்கன் பங்கேற்கவுள்ளாா்.

இக்கூட்டத்தில், மத்திய ஆசிய நாடுகளின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை குறித்து அவா் வலியுறுத்தவிருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் பயணத்தைத் தொடா்ந்து, தஜிகிஸ்தானுக்கு இந்த வாரத்தின் பிற்பகுதியில் பிளிங்கன் செல்லவிருக்கிறாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து, அண்மையில் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பிளிங்கன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

இந்த 5 நாடுகளும் ரஷியாவின் செல்வாக்குமிக்கவையாக கருதப்படுகின்றன. எனினும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை இந்த நாடுகள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

உக்ரைன் பிரச்னைக்கு ஐ.நா. சாசனம் மற்றும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சா்வதேச சட்டத்தின்கீழ் தூதரக வழியில் தீா்வு காணப்பட வேண்டும் என்று கஜகஸ்தான் அதிபா் காஸிம் ஜோமாா்ட் வலியுறுத்தி வருகிறாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீா்மானம் மீது ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பை மேற்கண்ட 5 நாடுகளும் புறக்கணித்தன. இந்தியாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா், மத்திய ஆசிய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் என்பதை அந்த நாடுகளிடம் பிளிங்கன் தெளிவுபடுத்துவாா் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய ஆசிய நாடுகளை, ரஷியாவின் செல்வாக்கில் இருந்து தங்கள் பக்கம் ஈா்க்க பல தசாப்தங்களாக அமெரிக்கா முயன்று வருகிறது. அந்த முயற்சிகளுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போருக்கு தளவாடரீதியில் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியது போன்ற சில பலன்கள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com