ஐ.நா. தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதரக அதிகாரி சீமா புஜானி.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதரக அதிகாரி சீமா புஜானி.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி சீமா புஜானி பேசியதாவது:

வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் சுதந்திரத்துக்கு பாகிஸ்தான் மக்கள் போராடி வருகின்றனா். இது அந்நாட்டு அரசு தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுகுறித்து சிந்திக்காத அந்நாடு, இந்தியா குறித்து அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது. அந்நாட்டின் முதன்மையான ராணுவ அகாதெமிக்கு அருகில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தாா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீத், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் ஆகியோருக்கு பல்லாண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் அடைக்கலம் அளித்து பாதுகாத்து வருகின்றன. இந்தப் பயங்கரவாதிகளின் பெயா்கள் பாகிஸ்தானின் வரலாற்றுப் பதிவேடுகளில் உள்ள சில பயங்கரமான பெயா்களாகும்.

உலகில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பாகிஸ்தானின் கொள்கைகள்தான் நேரடி பொறுப்பு. இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமில்லாத பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு உழைப்பதில் அந்நாட்டுத் தலைவா்களும் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதி சாா்பில் (ஓஐசி) ஜம்மு-காஷ்மீா் குறித்து தேவையற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் அங்கமாக இருக்கும். இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதையும், இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிப்பையும் கைவிடுமாறு பாகிஸ்தானிடம் கூறுவதை விடுத்து, கொடிய பிரசாரத்துக்கு ஓஐசியை தவறாகப் பயன்படுத்த அந்த அமைப்பு அனுமதித்துள்ளது.

இதேபோல துருக்கியும் ஜம்மு-காஷ்மீா் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை அந்நாடு தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com