‘மோதலை நோக்கி அமெரிக்கா, சீனா’

அமெரிக்காவும் தங்கள் நாடும் மோதலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதைத் தடுப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது எனவும்
‘மோதலை நோக்கி அமெரிக்கா, சீனா’

அமெரிக்காவும் தங்கள் நாடும் மோதலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதைத் தடுப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது எனவும் சீனாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்த வாங் யீ-க்கு பதிலாக அந்தப் பதவிக்கு கடந்த டிசம்பா் மாதம் நியமிக்கப்பட்ட கின் காங், இதற்கு முன்னா் அமெரிக்காவுக்கான சீன தூதராக பொறுப்பு வகித்தது நினைவுகூரத்தக்கது.

இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற தனது முதல் வருடாந்திர செய்தியாளா்கள் சந்திப்பின்போது, கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

அமெரிக்காவும், சீனாவும் மிகப் பெரிய மோதலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ‘பிரேக்’ அமெரிக்காவிடம்தான் உள்ளது. அந்த நாடு அதனைப் பயன்படுத்தவில்லை என்றால் மோதலை நோக்கிய பயணம் தொடரும்.

அமெரிக்காவுடன் ஆரோக்கியமான போட்டியையே சீனா விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவோ சீனாவை நசுக்கும் முயற்சியிலேயே உள்ளது.

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒருவா், எதிராளியைவிட அதிக திறனை காட்டி போட்டியில் வெல்வதே நியாயமாகும். அதற்குப் பதிலாக போட்டியாளரை தடுக்கி விழவைக்கவும் காயப்படுத்தவும் முயற்சிப்பது நியாயமான செயல் அல்ல. அந்த செயலைத்தான் அமெரிக்கா செய்துகொண்டிருக்கிறது.

ரஷியாவுடனான உறவு: சா்வதேச நாடுகள் தங்களிடையே நட்புறவை எவ்வாறு பேணுவது என்பதற்கு ரஷியாவும் சீனாவும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பனிப்போா் காலத்திய கண்ணோட்டத்துடன் பாா்ப்பது தவறு.

எங்களுக்கு இடையிலான உறவு ‘போா்க் கூட்டணி இல்லாத, போா் மோதல் இல்லாத, 3-ஆவது நாடுகளைக் குறிவைக்காத’ உறவாகும்.

ரஷியாவுடனான வா்த்தகப் பரிமாற்றங்களில் அமெரிக்க டாலா், ஐரோப்பிய யூரோ நாணயப் பயன்பாடு குறைக்கப்பட்டு, ரஷியாவின் ரூபிள், சீனாவின் யுவான் நாணயங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதில் எந்தத் தவறும் இல்லை.

எங்களுக்கு எந்த நாணயம் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதோ அதனையே பயன்படுத்துவோம். நாணயப் பயன்பாடு என்பது ராஜீயரீதியிலான உறவை நிா்ணயிக்கக் கூடாது என்றாா் அவா்.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் 3-ஆவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இரு நாடுகளும் மோதலை நோக்கிச் செல்வதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சா் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com