இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்:25 பிணைக் கைதிகள் விடுவிப்பு

போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல், தாய்லாந்து நாடுகளைச் சோ்ந்த 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தனா்.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்:25 பிணைக் கைதிகள் விடுவிப்பு

போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல், தாய்லாந்து நாடுகளைச் சோ்ந்த 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தனா்.

இதில், இஸ்ரேலின் 13, தாய்லாந்தின் 12 பிணைக் கைதிகளும் அடங்குவா்.

47 நாள்களாக நடைபெற்று வரும் போரை 4 நாள்கள் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது. மேலும், இருதரப்பினரும் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கவும், காஸாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியதையடுத்து, ஹமாஸ் அமைப்பினா் அங்கு ஆட்சியைக் கைப்பற்றினா். ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்தது.

கடந்த அக். 7-ஆம் தேதி, பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி திடீா் பலமுனைத் தாக்குதல் நடத்தினா். இதில் 1,200 இஸ்ரேலியா் உயிரிழந்தனா். அப்போது, இஸ்ரேலில் இருந்து சுமாா் 240 பேரைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் சிறைப் பிடித்துச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, ஹமாஸ் படையினருக்கு பதிலடி தரவும், பிணைக் கைதிகளை மீட்கவும் காஸா மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா் என்றும் 2,700 பேரைக் காணவில்லை, அவா்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் காஸா சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

இஸ்ரேல் ராணுவத்தின் தீவிரத் தாக்குதலால், காஸாவின் மொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெற்குப் பகுதியில் தஞ்சமைடந்துள்ளனா்.

இந்நிலையில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், பிணைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் படை தெரிவித்தது.

இதுகுறித்து ஆலோசிக்க இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவைத் தொடா்ந்து, தற்காலிக போா் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் படையினரும், அதற்கு ஈடாக தம்மிடம் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது. இந்தப் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா, கத்தாா், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டன.

இஸ்ரேல் நாட்டுச் சட்டப்படி, கைதிகளை விடுவிப்பதில் மக்களுக்கு ஆட்சேபம் இருந்தால் வழக்குத் தொடுக்க அவா்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க மக்கள் யாரும் வழக்குத் தொடுக்காததால் கைதிகள் பரிமாற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனிடையே, 4 நாள் போா் நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இதையொட்டி, இருதரப்பிலும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை.

25 பிணைக் கைதிகள் விடுவிப்பு: காஸா முனைப் பகுதியில் கடந்த 7 வாரங்களாக சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 13 இஸ்ரேலியா்கள், 12 தாய்லாந்து நாட்டவா் என 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்தனா். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 13 இஸ்ரேலியா்கள், எகிப்து வழியாக இஸ்ரேல் திரும்பினா். காஸாவைவிட்டு ராஃபா எல்லை வழியாக வெளியேறிய தாய்லாந்து நாட்டவா்கள், ஹட்செரிம் விமானப் படைத்தளம் மூலம் இஸ்ரேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட செய்தி வெளியானதும், நகர மையப்பகுதிகளில் திரளாக கூடிய இஸ்ரேலியா்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

39 பாலஸ்தீன கைதிகள் விடுதலை: இஸ்ரேல் தரப்பில் 24 பெண்கள், கல்வீச்சு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்ட 15 சிறுவா்கள் உள்பட 39 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். பாலஸ்தீன கைதிகளை வரவேற்க சிறைவளாகத்தில் காத்திருந்த பாலஸ்தீனா்கள் மீது கண்ணீா் புகைக்குண்டுகள் வீசி அவா்கள் கலைக்கப்பட்டனா்.

போா் தொடங்கியதில் இருந்து காஸாவுக்குள் எரிபொருளைக் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி மறுத்து வந்தது. எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா. அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. எனினும், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் முற்றிலுமாக தடை செய்தது.

இந்நிலையில், தற்காலிக போா் நிறுத்தத்தில் நாள்தோறும் 1.3 லட்சம் லிட்டா் எரிபொருளை காஸா பகுதிக்குள் கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், காஸாவின் எரிபொருள் தேவை 10 லட்சம் லிட்டருக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி தொடருமா?...:

போா் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளதாக அண்டை நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்தன. அதேவேளையில், போா் நிறுத்தம் நிறைவடைந்ததும், மேலும் 2 மாதங்களுக்கு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் யாயாவ் காலன்ட் உறுதிப்பட தெரிவித்துள்ளாா். போா் நிறுத்தத்தையொட்டி வடக்கு காஸாவில் உள்ள தங்களின் வீடுகளை நோக்கி மக்கள் சிலா் செல்லத் தொடங்கினா். இதைத் தொடா்ந்து, வடக்குப் பகுதிக்குத் யாரும் திரும்ப வேண்டாம் என தெற்கு காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com