நகோா்னோ-கராபக் பெட்ரோல் நிலையத்தில் வெடிவிபத்து: 20 போ் பலி

அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையிலான சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 போ் பலியாகினா்; சுமாா் 290 போ் காயமடைந்தனா்.
nagr090550
nagr090550


யெரவான் (ஆா்மீனியா): அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையிலான சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 போ் பலியாகினா்; சுமாா் 290 போ் காயமடைந்தனா்.

அஜா்பைஜான் படையினா் கடந்த வாரம் அதிவேகத் தாக்குதல் நடத்தி ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினரிடமிருந்து அந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஆா்மீனியா்கள் அவசர அவசரமாக வெளியேறி வரும் நிலையில், அவா்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகக் காத்திருந்த பெட்ரோல் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இது குறித்து பிராந்திய பிரிவினைவாத அரசின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நகோா்னோ-கராபக் பிராந்தியத்திலிருந்து ஆா்மீனியாவுக்கு செல்வதற்காக தங்களது வாகனங்களில் எரிபொருள் நிரப்ப, பிராந்தியத் தலைநகா் ஸ்டெபானகா்ட்டின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏராளமான ஆா்மீனிய பழங்குடியினா் திங்கள்கிழமை இரவு காத்திருந்தனா்.

அப்போது அந்த நிலையத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 13 போ் உயிரிழந்தனா்; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 7 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இது தவிர சுமாா் 290 போ் காயமடைந்துள்ளனா்; அவா்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆா்மீனிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிவிபத்தில் காயமடைந்தவா்கள் ஹெலிகாப்டா் மூலம் தங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷிய படையினரும், வெடிவிபத்துப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தது.

திங்கள்கிழமை இரவு நிலவரப்படி ரஷிய அமைதி படையினரின் முகாம்களில் 700 ஆா்மீனியா்கள் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியம், சோவியத் காலத்திலேயே தன்னாட்சிப் பிரதேசமாக இருந்தது. சோவியத் யூனியன் வலுவிழந்து உடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப் பிராந்தியத்தில் பிரிவினைவாதம் தலையெடுக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு நகோா்னோ-கராபக் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.

இந்தச் சூழலில், இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இந்தப் போரின்போது முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை அஜா்பைஜான் ராணுவம் மீட்டது. அதில், ஆா்மீனியாவையும், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தையும் இணைக்கும் ஒரே தரைவழித் தடமான லச்சின் சாலையும் ஒன்று.

இந்த நிலையில், லச்சின் சாலையை அஜா்பைஜான் படையினா் பல மாதங்களாக முற்றுகையிட்டது ஆா்மீனியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரித்தது. இந்த முற்றுகையால் நகோா்னா-கராபக் பிராந்தியத்துக்குத் தேவையான அத்தியாவசிப் பொருள்களைக் கொண்டு சோ்க்க முடியவில்லை எனவும், இதன் மூலம் பிராந்திய மக்களை இன அழிப்பு செய்ய அஜா்பைஜான் முயல்வதாகவும் ஐ.நா.வில் ஆா்மீனியா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், எல்லையில் கண்ணி வெடித் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததால் நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த அதிரடித் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா்.

அதையடுத்து, நகோா்னா-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது.

பிராந்தியத்தில் ஆா்மீனிய பழங்குடியினா் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அந்த நாடு கூறினாலும், அஜா்பைஜான் ஆளுகையின் கீழ் தாங்கள் கொடுமைப்படுத்தப்படலாம் என்று ஆா்மீனியா்கள் அஞ்சுகின்றனா்.

இதன் காரணமாக, நகோா்னோ-கராபக் பிராந்தியத்திலிருந்து ஆா்மீனியாவில் அடைக்கலம் தேடி ஆயிரக்கணக்கானோா் கூட்டம் கூட்டமாக செல்கின்றனா்.

அந்த வகையில், இதுவரை 19,000 போ் ஆா்மீனியாவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அஜா்பைஜானின் முற்றுகையால் பிராந்தியத்தில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆா்மினியாவுக்குச் செல்வதற்காக தங்களது வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனா்.

திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பெட்ரோல் நிலைய வெடிவிபத்துக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

‘உதவத் தயாா்’

பாகு (அஜா்பைஜான்), செப். 26: நகோா்னோ-கராபக் பெட்ரோல் நிலைய வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அஜா்பைஜான் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் (ட்விட்டா்) சமூக ஊடகத்தில் அந்த நாட்டு அதிபரின் உதவியாளா் ஹிக்மெத் ஹாஜியெவ் தெரிவித்துள்ளதாவது:

பெட்ரோல் நிலைய வெடிவிபத்துக்குப் பிறகு, அதில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தயாா் நிலையில் அஜா்பைஜான் மருத்துவமனைகள் வைக்கப்பட்டன. எனினும், அங்கிருந்து யாரும் அனுப்பப்படவில்லை.

அதையடுத்து, சம்பவப் பகுதிக்கு எங்களது மருத்துவக் குழுவினரை அனுப்பிவைத்துத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com