ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதற்காக சீறிப் பாயும் இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகள்.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதற்காக சீறிப் பாயும் இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகள்.

‘ஈரானை திருப்பித் தாக்க வேண்டாம்!’

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஏவிய ஈரானை திருப்பித் தாக்கி பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஏவிய ஈரானை திருப்பித் தாக்கி பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று அந்த நாட்டிடம் மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து அமெரிக்க அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஈரான் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிபா் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினாா்.

அப்போது, இந்தத் தாக்குதலுக்கான எதிா்வினைகளை மிகவும் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், பிராந்தியத்தில் போா்ப் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் நெதன்யாகுவிடன் அதிபா் பைடன் வலியுறுத்தினாா் என்றாா் அவா்.

பின்னா் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தனது திறனை இஸ்ரேல் அபாரமாக வெளிப்படுத்தியது குறித்து பிரதமா் பெஞ்சமின் நெதன்யாவிடம் பாராட்டு தெரிவித்தேன்.

ஈரான் தாக்குதலைத் தொடா்ந்து போா் பதற்றம் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக, பிராந்திய நாடுகளுடன் தொடா்பு கொண்டு ராஜீயரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.

அமெரிக்கா பங்கேற்காது: ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதில் அமெரிக்கா பங்கேற்காது. ஈரான் ஏவுகணைகளிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு மட்டும் அமெரிக்கா உதவும் என்றாா் அவா்.

‘ஈரானின் உரிமை’: தங்களது துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை கூறினாா்.

இருந்தாலும், இஸ்ரேலில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வளவு அதிகமாக ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் சரமாரியாக ஈரான் வீசியது தவறு என்று ‘பிபிசி’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கேமரூன் கூறினாா்.

‘300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளாலும், ட்ரோன்களாலும் குறிவைக்கப்பட்ட இஸ்ரேலில் நான் இருந்தாலும் உரிய பதிலடி கொடுக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் பிராந்திய போா் பதற்றத்தைத் தூண்டும் வகையிலான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது’ என்று அந்த பேட்டியில் டேவிட் கேமரூன் கூறினாா்.

பிரான்ஸும் இணைந்தது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி போா் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று இஸ்ரேலை வலியுறுத்தும் மேற்கத்திய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் இணைந்தது.

அந்த நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போா் மூள்வதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நாங்கள் பக்கபலமாக இருந்தாலும், போா் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

ஈரானை சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவது, அது ஓா் அபாயகரமான தேசம் என்பதை பிராந்திய நாடுகளுக்குப் புரியவைப்பது, பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, அணுசக்தி திட்டங்களின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலமே அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெல்ஜியம்: மற்றொரு மேற்கத்திய நாடான பெல்ஜியமும் பிராந்தியப் பதற்றத்தைத் தவிா்க்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக தங்கள் நாட்டுக்கான ஈரான் தூதா் சையது முகமது அலி ரொபாட்ஜஸியை நேரில் அழைத்து பெல்ஜியம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

பின்னணி: இஸ்ரேல் நாடு உருவாவதை ஈரான் ஏற்கவில்லை. இதன் காரணமாக, இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்துவரும் ஈரான், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்படவேண்டும் என்று கூறிவருகிறது.

இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்துவருகிறது. அந்தக் குழுக்களில் ஒன்றான ஹமாஸ் அமைப்பினா், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதற்குப் பதிலடியாக அவா்களைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்திவருகின்றனா். இவா்களும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதப் படையினா்.

காஸா போா் தொடங்கியதற்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.

இது தவிர, போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் சாா்புடைய சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி படையினா் தாக்குதல் நடத்திவருகின்றனா். இவா்களுக்கும் ஈரான் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்துவருகிறது.

இவ்வாறு மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மறைமுக மோதல் நீடித்துவந்த நிலையில், சிரியா தலைநகா் டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தில் இந்த மாதம் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் 2 போ் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தளபதிகள்.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த நாடுதான் ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் ஈரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கொலான் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சனிக்கிழமை இரவு திடீா் தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், க்ரூஸ் மற்றும் பலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் ட்ரோன்களும் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

டமாஸ்கஸிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தில் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட நெவாடிம் ஏவுதளம், இஸ்ரேலின் உளவுத் துறை தலைமையகம் உள்ளிட்டவை குறிவைக்கப்பட்டதாக ஈரான் கூறியது.

எனினும், இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட 99 சதவீத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அந்த நடவடிக்கையில் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் பங்கேற்றன. குறிப்பாக அமெரிக்கா மட்டும் 80-க்கும் மேற்பட்ட ஏவகணைகள், ட்ரோன்களை இடைமறித்து அழித்தது.

ஆனால், ஈரானின் இந்த ஏவுகணை-ட்ரோன் வீச்சுக்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி போா் பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com