கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் உள்பட 12 பேர் துருக்கியில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் பரிதவித்து வருகின்றனர்.
3 மாதத்துக்கும் மேலாக துருக்கியில் தவிக்கும் தமிழக மாலுமிகள்
3 மாதத்துக்கும் மேலாக துருக்கியில் தவிக்கும் தமிழக மாலுமிகள்படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

நவி மும்பை பகுதியில் செயல்படும் தனியார் கப்பல் போக்குவரத்து மேலாண்மை நிறுவனங்கள் மூலம், தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட மொத்தம் 12 இந்திய மாலுமிகள், துருக்கியில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் கப்பலின் கேப்டன் நாகர்கோவிலை சேர்ந்த 49 வயதான க்லீட்டஸ் ஜேசுதாஸன் மற்றும் சென்னை அருகே திருமழிசை பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகிய இரு மாலுமிகளும் அடங்குவர்.

துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள ஆம்பார்லி துறைமுகத்தில் தனியாருக்கு சொந்தமான கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கடந்த செப்டம்பரில் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை முறையாக வழங்கவில்லை என்பதால் துருக்கி அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட கப்பலில் சட்டவிரோதமாக தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட மொத்தம் 12 இந்திய மாலுமிகளை பணியமர்த்தியுள்ளன நவி மும்பையை சேர்ந்த கப்பல் நிறுவனங்கள். அவர்கள் பயணம் செய்யப்போகும் கப்பல், ஏற்கெனவே சிறை பிடிக்கப்பட்டிருக்கும் தகவல் அவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வேலைவாய்ப்பு சேவைகள் முகமை ஏஜெண்டுகள் என்ற பெயரில் மோசடியாக செயல்பட்டு வந்த நபர்கள் மூலம், அவர்கள் அனைவரும் நவி மும்பை பகுதியில் செயல்படும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட விவரங்களை அறியாத தங்களை, ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சட்ட விரோதமாக அனுப்பி வைத்துள்ளது அந்த மோசடி குழு என கப்பலின் கேப்டன் நாகர்கோவிலை சேர்ந்த 49 வயதான க்லீட்டஸ் ஜேசுதாஸன் கண்ணீருடன் பேசியுள்ளார்.

உணவின்றி மிகுந்த சிரமத்துக்கு இடையே பரிதவித்து வருவதாகவும், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தங்களின் குடும்பங்கள் வருமானமின்றி கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, துருக்கியில் சிக்கியுள்ள தமிழக மாலுமிகளை மீட்பது குறித்து, இந்திய கப்பல் இயக்குநரகத்தின் துணை இயக்குநர் கேப்டன் மணீஷ் குமார் கூறியிருப்பதாவது, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து கப்பலில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, துருக்கியில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் அனுப்பபட்டு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்மாத இறுதிக்குள், செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட கப்பலின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கப்பலின் உரிமையாளர் தொகையை செலுத்தவில்லையெனில் மும்பையை சேர்ந்த சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதகவும் அவர் கூறினார்.

மோசடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு விசாரணை நடைபெற்று வருவதகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய மோசடி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டுமென மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கப்பலில் வேலை என்ற ஆசை வார்த்தையை நம்பி ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் தற்போது அரசின் உதவியை எதிர்பார்த்து துருக்கியில் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com