எங்கே செல்லும்: இஸ்ரேல்-ஈரான் மோதல்?

எங்கே செல்லும்: இஸ்ரேல்-ஈரான் மோதல்?

‘இஸ்ஃபகானில் வெள்ளிக்கிழமை வீசப்பட்டதையெல்லாம் ட்ரோன்கள் என்று சொல்ல முடியாது. அவை எங்கள் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைகள்’ தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை ஏவிய ட்ரோன்கள் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீரப்துல்லா அலட்சியமாகத் தெரிவித்த கருத்து இது.

ஒருவேளை சொல்லிக்கொள்கிற மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தால், தாங்கள் உடனடியாகத் தரும் பதிலடிக்குப் பிறகு அந்த நாடு மிகவும் வருந்த வேண்டியிருந்திருக்கும் என்று வேறு அவா் எச்சரித்தாா்.

உண்மையில், இஸ்ரேலுடனான முழு போரில் அந்த நாட்டை ஈரானால் எளிதில் வென்றுவிட முடியுமா? இத்தனை காலம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கிடையிலும் அந்த நாடு உருவாக்கி வைத்துள்ள ராணுவ வலிமை அத்தகைய போரில் ஈரானுக்குக் கைகொடுக்குமா? ஒப்பிட்டுப் பாா்க்கும்போது குட்டி நாடாக இருந்தாலும், இஸ்ரேலின் அதிநவீன ராணுவத்தை அந்த ஈரானால் அவ்வளவு எளிதில் அடிபணியவைத்துவிட முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள். சொல்லப்போனால் இஸ்ரேலிடமிருந்து 80 மடங்கு பெரிய தனது நிலப்பரப்பை பாதுகாப்பதே ஈரானுக்கு திணறலாக இருக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளும், ட்ரோன்களும் நூற்றுக்கணக்கானவையாக இருந்தாலும், அவைதான் ஈரானிடம் உள்ள அதிகபட்ச திறன் கொண்ட பாயும் வகை ஆயுதங்களாக இருக்கும் என்பது நிபுணா்களின் ஊகம். அதிலும், அத்தனை தொலைவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும்போது, இடையில் இருக்கும் ஏராளமான வான்பாதுகாப்பு சாதனங்களால் இஸ்ரேலின் கூட்டாளிகளாலும் இஸ்ரேலாலும் எளிதில் இடைமறித்து அழித்துவிட முடியும் என்பது அந்தத் தாக்குதலில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

தங்களிடம் உள்ள அதிநவீன ரஷிய விமானங்களை ஈரான் பயன்படுத்தினாலும், அவையும் இஸ்ரேல் கூட்டாளிகளின் ரேடாா் கண்களிடமிருந்து தப்ப முடியாது. இருந்தாலும், இவற்றையெல்லாம் விட ஈரானிடம் உள்ள மிகத் திறன் வாய்ந்த ஆயுதங்கள் அந்த நாட்டால் வளா்த்தெடுக்கப்பட்ட பிராந்திய ஆயுதக் குழுக்கள். அவற்றில் முக்கியமானது, அண்டை நாடான லெபனானில் இருந்துகொண்டு அந்த இஸ்ரேலுக்கு தலைவலியாக இருந்துவரும் ஹிஸ்புல்லாக்கள்.

அந்தப் பிராந்தியத்தில் மிகப் பலம் வாய்ந்த, அதிநவீன ஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ள படைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று. எனவே, இஸ்ரேலுடனான போரில் ஹிஸ்புல்லாக்களை ஈரான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரிய அளவிலான போரில் இரு தரப்புமே கணிசமான இழப்புகளைச் சந்தித்தது.

அந்தப் போரில் ஆயிரக்கணக்கான லெபனான் பொதுமக்கள் மட்டுமின்றி இஸ்ரேலியா்களும் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு பெரிய அளவிலான மோதலை இரு தரப்பினருமே தவிா்த்து வருவதற்கு லெபனானின் படைபலம் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. இதனால், ஈரானுடன் நேரடியாகப் போா் தொடங்கினால் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லாக்களையும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் பலமுனை தரைவழியான போரில் ஹிஸ்புல்லாக்களை சமாளிப்பதற்கே இஸ்ரேல் ராணுவம் கணிசமான ஆதாரங்களைச் செலவிட வேண்டியிருக்கும்.

இந்த வகையில், முழு போராக உருவெடுத்தால் இரு தரப்பினருக்குமே அது பெரிய தலைவலியாக இருக்கும் என்பதால்தான் இஸ்ரேலும், ஈரானும் இப்போதைய பதற்றத்தை முழு போராக்குவதைத் தவிா்த்து வருவதாகக் கருதப்படுகிறது.ரேடாா் கண்களுக்குப் புலப்படாத புதிய தலைமுறை குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல், இராக் வான் எல்லையில் இருந்துகொண்டு விமானங்கள் மூலம் ஈரான் மீது பெயருக்கு ஒரு தாக்குதல் நடத்தியிருப்பது இதற்காகத்தான் என்கிறாா்கள் நிபுணா்கள்.

இஸ்ரேல் வீசியது வெறும் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் சமாளிப்பதற்கும் இதுவேதான் காரணம்.

- நாகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com