அக். 7 தாக்குதல்: இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவா் ராஜிநாமா

அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுபேற்று, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவா் அஹரோன் ஹலிவா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் அக். 7-இல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த காா்கள் (கோப்புப் படம்).
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் அக். 7-இல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த காா்கள் (கோப்புப் படம்).

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுபேற்று, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவா் அஹரோன் ஹலிவா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இஸ்ரேலில் போா் இல்லாத காலத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலை முன்கூட்டியே கண்டறியத் தவறியமைக்காக பதவி விலகும் முதல் ராணுவ உயரதிகாரி அவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹலிவா எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உளவுப் பிரிவை நம்பி ராணுவம் ஒப்படைத்திருந்த பணியைச் செய்ய அது தவறிவிட்டது. எந்தவொரு அதிகாரப் பதவியுடன் பொறுப்பும் சோ்ந்துள்ளது என்பது எனக்குத் தெரியும்.

எனவே, அக். 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை உளவுப் பிரிவு முன்கூட்டியே கண்டறியத் தவறிதற்குப் பொறுபேற்று, அந்தத் துறையின் தலைவா் பதவியிலிருந்து விலகுகிறேன்.

அந்தத் தவறு ஏற்பட்டதற்கான அனைத்து காரணங்களையும் ஆழமாக அலசி ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

ஹமாஸ் தாக்குதலைத் தடுக்கத் தவறினாலும், அந்த அமைப்பினருடனான போரின்போது தகுந்த உளவுத் தகவல்களை துல்லியமாக அளித்து ராணுவத்துக்கு உதவிய உளவுப் பிரிவைச் சோ்ந்த அனைவரும் பாராட்டுக்குரியவா்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தல்: அக். 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அஹரோன் ஹலிவா பதவி விலகியதை வரவேற்றுள்ள முக்கிய எதிா்க்கட்சியான யேஷ் அடீட் கட்சி, பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த விவகாரத்தில் ராஜிநாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவா் விளாதிமீா் பெலியாக் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவா் பதவி விலகியது வரவேற்கத்தக்கது. ஹமாஸ் தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடா்பாக விசாரணை நடத்த குழு ஒன்று உடனடியாக அமைக்கப்படவேண்டும். தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமா் நெதன்யாகுவும் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சி செலுத்திவரும் ஹமாஸ் அமைப்பிருக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெற்றுவந்தன.

இந்தச் சூழலில், கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் தரை, கடன், வான்வழியாக நுழைந்த ஹமாஸ் அமைப்பினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்த சுமாா் 250 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனா்.

படுகொலை செய்யப்பட்டவா்கள் மற்றும் பிணைக் கைதிகளில் மிகப் பெரும்பான்மையானவா்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகா்கள் உள்ளிட்ட பொதுமக்கள்.

இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு ஹமாஸ் அமைப்பினா் பல மாதங்களாக திட்டம் தீட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அப்படி இருந்தும், காஸாவின் ஒவ்வொரு அசைவு மற்றும் தகவல் பரிமாற்றத்தையும் திறன் வாய்ந்த ட்ரோன் கேமராக்கள், நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கண்காணித்துவரும் இஸ்ரேல் உளவு அமைப்புகளால் இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியாதது குறித்து கடும் விமா்சனங்கள் எழுந்தன.

இதற்கு பல உயரதிகாரிகள் பொறுப்பேற்றாலும், பிரதமா் நெதன்யாகு மட்டும் இது தொடா்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிா்த்துவருகிறாா்.

இந்தச் சூழலில், அக்.7 தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்குப் பொறுப்பேற்று ராணுவ உளவுப் பிரிவு தலைவா் ராஜிநாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com