அமெரிக்கா: சாலை விபத்தில் இரு இந்திய மாணவா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு இந்திய மாணவா்கள் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விபத்தில் உயிரிழந்தவா்கள் தெலங்கானாவைச் சோ்ந்த நிவேஷ் முக்கா (19) மற்றும் கெளதம் பாா்சி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனா்.

இந்திய மாணவா்கள் பயணித்த வாகனம் லேக் பிளெசண்ட் பகுதியில் சனிக்கிழமை மாலை 6.18 மணியளவில் மற்றொரு காருடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. நிவேஷ், கெளதம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அவா்களுடைய காரின் ஓட்டுநா் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவா்களின் நண்பா்களைக் கண்டறிந்து தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com