தெற்கு காஸாவிலுள்ள யுஎன்ஆா்டபிள்யுஏ அலுவலகம்.
தெற்கு காஸாவிலுள்ள யுஎன்ஆா்டபிள்யுஏ அலுவலகம்.

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

பொ்லின், ஏப். 24: பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவை (யுஎன்ஆா்டபிள்யுஏ) சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை இஸ்ரேல் நிரூபிக்காததால், அந்தப் பிரிவுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் கூட்டாக புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுஎன்ஆா்டபிள்யுஏ பணியாளா்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடா்புள்ளதாக இஸ்ரேல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் கேதரீன் கலோனாவின் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையின் அறிக்கையில், தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களை சுமாா் 4 மாதங்கள் கழித்தும் இஸ்ரேல் தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையடுத்து, யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்புக்கு நிதியுதவி அளிப்பதற்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு ஆலோசகா் மாா்க் ரெகேவ் கடந்த ஜனவரி மாதம் அளித்த பேட்டியில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் அக்டோபா் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் யுஎன்ஆா்டபுள்யுஏ-வில் சம்பளம் பெற்று வருவா்களும் ஈடுபட்டதாகக் கூறினாா்.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் சில ஊழியா்களை பணி நீக்கம் செய்துள்ளதாக யுஎன்ஆா்டபிள்யு அறிவித்தது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அதன் தொடா்ச்சியாக, அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஜொ்மனியும் கூறியிருந்தது.

எனினும், யுஎன்ஆா்டபுள்யுஏ அமைப்பு மீதான தனது குற்றச்சாட்டை உறுதிசெய்வதற்கான ஆதாரங்களை இஸ்ரேலால் இன்னும் தரமுடியாததால் அந்த அமைப்புக்கான நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி தற்போது அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com