இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவா் கலீல் அல்-ஹய்யா சனிக்கிழமை கூறியதாவது:

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக தனது செயல்திட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளது. அதன் அம்சங்களை ஆய்வு செய்துவருகிறோம்.அந்த செயல்திட்டதை முழுமையாக பரிசீலித்த பிறகு இது தொடா்பான எங்கள் பதிலை தெரியப்படுத்துவோம் என்றாா் அவா்.

எனினும், இஸ்ரேலின் செயல்திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை அவா் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி நாடுகளாக செயல்படுவதற்கான ‘இரு தேசத் தீா்வு’ எட்டப்பட்டால் தங்களது அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் இயக்கமாக மாறும் என்று கலீல் அல்-ஹய்யா கூறியது நினைவுகூரத்தக்கது.

உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்கக்கூடாது என்பதை அதிகாரபூா்வ நிலைப்பாடாகக் கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்வும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.இந்த நிலையில், காஸாவில் 6 வார போா் நிறுத்தம் மேற்கொள்ளவும் அப்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 40 நோயுற்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும் இரு தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக எகிப்து தலைநகா் கெய்ரோவில் இந்த மாதம் பேச்சுவாா்த்தை தொடங்கியது.

அந்தப் பேச்சுவாா்த்தையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் வழங்கியுள்ள போா் நிறுத்த செயல்திட்டத்தைப் பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தற்போது அறிவித்துள்ளது.

காஸா உயிரிழப்பு 34,388

காஸா சிட்டி, ஏப். 27: காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,388-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்; 69 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 203 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,388-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 77,437 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com