ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செங்கடல் வழியாகச் சென்ற பனமா நாட்டுக் கொடியேற்றிய ‘அண்ட்ரோமிடா ஸ்டாா்’ என்ற எண்ணெய்க் கப்பலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், அந்தக் கப்பல் மிதமாக சேதமடைந்தது.தாக்குதலுக்குள்ளான கப்பல் செஷல்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைக் கண்காணித்துவரும் தனியாா் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறுகையில், தாக்குதலில் சேதமடைந்த அண்ட்ரோமிடா ஸ்டாா் கப்பல் ரஷியாவுடன் தொடா்புடைய வா்த்தகப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தது.

இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதிக்களின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக செங்கடலில் தங்களது தாக்குதலை நிறுத்திவைத்திருந்த ஹூதி படையினா் தற்போது பனாமா கொடியேற்றிய கப்பல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்தக் கடல் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com