கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

கென்யாவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத கனமழை.
கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

ஆப்பிரிக்க நாடான, கென்யாவில் கனமழை காரணமாக பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

கென்யாவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால், கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஊருக்குள் வெள்ளம் புகுந்து காட்டாறு போல தாழ்வான பகுதிகளுக்கு பாய்ந்தோடியது. சில இடங்களில் வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளன. மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளும் இன்று(29.04.24) திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் மேலும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மே 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கென்யாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தலைநகர் நைரோபியில் பதிவாகியுள்ளன. கென்யாவின் பிரதான விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது, சில விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளது. ஓடுபாதை வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

கரையோரங்களில் வசித்துவந்த 2 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com