ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐரோப்பாவின் மிகப்பெரிய உப்பு நீர் தடாகமான ’மார் மெனோரை’ பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப் போராடியவர்.
பேராசிரியர் தெரேசா விசெண்டே
பேராசிரியர் தெரேசா விசெண்டேபடம் | ஏபி
ஸ்பெயினில் ’மார் மெனோர்’  உப்புநீர் தடாகத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ஸ்பெயினில் ’மார் மெனோர்’ உப்புநீர் தடாகத்தில் செத்து மிதக்கும் மீன்கள்படம் | ஏபி

ஸ்பெயினின் மர்ஷியாவை சேர்ந்த சட்டப் பேராசிரியர் தெரேசா விசெண்டேவுக்கு(61) 2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் தென்கிழக்கு கடற்கரை நகரமான மர்ஷியாவில் சிறிய கடல் என்றழைக்கப்படும் ’மார் மெனோர்’ என்னும் உப்புநீர் தடாகத்தை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப் போராடியதற்காக அவருக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘கிரீன் நோபல்’(கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு -பசுமை நோபல்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் செய்தார் இந்த சாதனைப் பெண்மணி?

135 சதுர கி.மீ பரப்பளவில் 70 கி.மீ நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உப்பு நீர் தடாகமான ’மார் மெனோர்’, 7 மீட்டர் ஆழம் கொண்டது. மத்திய தரைக்கடலில் இருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில் இந்த தடாகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நவீன காலத்திற்கேற்ப புதுப்புது தொழில்நுட்பங்களுடன் வேளாண் ஏற்றுமதிக்காக அதிகளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஒருபுறம் வேளாண் கழிவுகள், மறுபுறம் நகரமயமாக்கலின் தாக்கம் மற்றும் அருகேயுள்ள சுரங்கப் பணிகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் ஆகியவற்றால் அருகே அமைந்துள்ள இந்த தடாகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

உச்சபட்சமாக, மர்ஷியாவில் 2019இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நீர் தடாகத்தை சூழ்ந்தது. குறிப்பாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை வேதியியல் உரங்களும், சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பல்வேறு வேதியியல் பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த தடாகத்தில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பால் தடாக நீரில் இருந்த ஆக்ஸிஜன் வெளியேற்றப்பட்டு அதில் இருந்த லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன.

தெரேசாவின் இளம்பருவத்தில் இயற்கையின் வரப்பிரசாதமாக இருந்த தடாகத்தில் அவர் மகிழ்ச்சியுடன் செலவழித்த நாட்கள் ஏராளம். இந்த நிலையில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் கோர காட்சிகள் தன்னை உலுக்கியதாக பதிவு செய்துள்ளார் தெரேசா. இதனால் தனக்குள் ஏற்பட்ட தாக்கமே தடாகத்தை பாதுகாக்க, சட்டம் இயற்ற உந்துசக்தியாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மர்ஷியா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரன தெரேசா, சுற்றுச்சூழல் சட்டப்பிரிவில் அதிக ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருபவர். 1986 காலகட்டத்திலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக போராடி வருபவரும் கூட. ’இயற்கையின் உரிமையை மீட்டெடுக்காவிடில், மனித உரிமைகள் நீர்த்துப் போய்விடும், மனிதர்களும் இயற்கையின் ஓர் அங்கம்’ என்ற கோட்பாட்டை பின்பற்றி வாழ்பவர்.

இதையடுத்து தடாகத்தை பாதுகாக்க செயல் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இந்த திட்டத்திற்கான சட்ட ஒப்புதல் கிடைத்தால், மனிதர்களுக்கான சட்டங்கள் இருப்பதைப் போன்றே தடாகத்தை பாதுகாக்க சட்டஉரிமை கிட்டும். இந்த நிலையில், 2020இல் தனது வரைவு மசோதாவை முதன்முறையாக ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அவர். ஆனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க, ஸ்பெயினில் 5 லட்சம் பேரிடமாவது கையெழுத்து வாங்கி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கரோனா பெருந்தொற்று பரவியிருந்த காலகட்டத்திலும் கூட, பெரும்பாடுபட்டு இந்த சட்ட வரைவு மசோதாவுக்காக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். 2021-ஆம் ஆண்டு நவம்பரில், 6 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி இந்த சட்ட மசோதாவை உயிர்ப்புடன் இருக்கச் செய்த பெருமை தெரேசாவுடன் இணைந்து பணியாற்றிய ஸ்பெயினை சேர்ந்த தன்னார்வலர்களையும் சாரும். ஒரு கட்டத்தில், அவருடைய முயற்சியைப் பாராட்டி பொதுசமூகமும் அவருக்கு ஆதரவாக வரத் தொடங்கியது.

2022இல் ஸ்பெயின் நடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. விரைவில் சட்டமும் இயற்றப்பட்டது. ஐரோப்பாவின் மிகப்பெரிய தடாகத்தை பாதுகாக்கவும், அதில் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

ஐரோப்பாவில் முதன்முறையாக, மனித கொடுஞ்செயல்களில் இருந்து இயற்கை தடாகத்தை பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளதை வீதிகளில் இறங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் தெரேசா குழுவினர்.

உலகம் முழுவதும் இயற்கை வளங்களை, நீர்நிலைகளுக்காகச் சட்டம் இயற்றி பாதுக்காக்க வேண்டுமென்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் தெரேசா. தனியொரு ஆளாகப் போராடி ஐரோப்பாவிற்கான மகத்தான சுற்றுச்சுழல் சாதனையைப் புரிந்துள்ள தெரேச விசெண்டேவுக்கு ’2024-ஆம் ஆண்டுக்கான பசுமை நோபல் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சமூகத்தில் பணியாற்றும் சாமானிய மக்களை அங்கீகரிக்க, ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு(பசுமை நோபல்)’ 1989-ஆம் ஆண்டு முதல், ரிச்சர்ட் மற்றும் ரோடா எச். கோல்ட்மேன் ஆகியோரால் நிறுவப்பட்டது.

2024-ஆம் ஆண்டுக்கான பசுமை நோபல் விருதுக்காக உலகளவில் 100 பேர் பரிந்துரைக்கப்பட் நிலையில், அவர்களில் இந்தியாவின் அலோக் சுக்லா உள்பட மொத்தம் 7 பேருக்கு ’பசுமை நோபல் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மார்செல் கோம்ஸ், முர்ராவா மரூச்சி ஜான்சன், ஆண்ட்ரியா விதாரா, நோன்ஹ்லே புதுமா மற்றும் சினேகுகு சுகுலு ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

”மக்கள் தங்களிடையே உள்ள அரசியல் வித்தியாசங்கள், மத வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து செயலாற்றும்போது வெற்றி நிச்சயம்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் தெரேசா விசெண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com