சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முக்கியத்துவம் :சிங்கப்பூர் நிறுவனத்தின் ஆவணப்படம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணப்படத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தாகூர் சங்கம் தயாரித்துள்ளது.
காந்தியடிகளுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | கோப்புப்படம்
காந்தியடிகளுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | கோப்புப்படம்

சிங்கப்பூர் : இந்திய திருநாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் சிங்கப்பூரில் இருந்துகொண்டு ஆங்கிலேயரை எதிர்க்கும் வல்லமை வாய்ந்த இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியவர்.

இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த ’தாகூர் சங்கம்’, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. அதில், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக, நேதாஜி முன்னெடுத்த பிரசாரத்தில்,  சிங்கப்பூரின் பங்கு என்ன என்பதை விவரமாக விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து படத்தை உருவாக்கியுள்ள தாகூர் சங்கத்தின் இயக்குநர் டோலி டேவன்போர்ட்  தெரிவித்திருப்பதாவது, “நம்மில் பெரும்பாலானோர், அதிலும் குறிப்பாக, இளம் தலைமுறையினர், நம் புகழ்பெற்ற வரலாற்றில் இந்த பகுதி குறித்து அறிந்திருக்கவில்லை.  ”நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சிங்கப்பூரின் சகாப்தம் - சிங்கப்பூரில் ஓர் இந்திய விடியல்” என்ற பெயரில்  உருவாகியுள்ள இந்த குறும்படம் நேதாஜியின் வரலாறு அழியாதிருப்பதை உறுதி செய்யும்.

மேலும் இந்திய தேசிய ராணுவத்தின் அளப்பறியா பங்களிப்பும் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. 42 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் மூலம், ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலையடையும் அந்த இறுதிகட்ட காலகட்டத்தில், சிங்கப்பூர் எவ்வளவு முக்கிய பங்காற்றியது என்பதை விளக்குகிறது.

இந்த ஆவணப்படம் ஜனநயகத்தில், சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான ஓர் முன்மாதிரியாக, இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் உதாரணமாகத்  திகழும்” என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com