தென் கொரியாவில் நாய்க் கறி உண்ணத் தடை!

தென் கொரியாவில் நாய்க் கறி உண்ணும் வழக்கம்  முடிவுக்கு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென் கொரிய மக்களிடையே காலங்காலமாக இருந்துவரும் நாய்க் கறி உண்ணும் வழக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.

நாய்க் கறி வணிகம் மற்றும் நுகர்வினைத் தடை செய்யும் சட்ட முன்வரைவு இன்று தென் கொரிய நாடாளுமன்றத்தில்  அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் 208 - 0 என்ற வாக்குகளில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்தச் சட்டம் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நாய் வளர்ப்பு, கொல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல்  அனைத்தும் தடை செய்யப்படுகின்றன.

மேலும், சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. 

நாய்க் கறி உண்போருக்கு எதிராக மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது கடும் அபராதம் விதிக்கவும் சட்டம் வகை செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாய்க் கறி தொடர்பாகப் பல பத்தாண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. உள்நாட்டிலும் பன்னாட்டளவிலும் கடும் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

1978 முதலே தென் கொரியாவில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாய்க் கறி உண்பது சட்ட விரோதம்  என்றிருக்கிறது. என்றாலும், நடைமுறையில் மக்களிடையே  சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தியும் பண்பாடு என்ற  பெயரிலும் நாய்க் கறி சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.

தென் கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்ப் பண்ணைகளும் எண்ணற்ற உணவகங்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடைக் காலத்தில் நாய்க் கறி உண்பது உடல் ஆற்றலை வலுப்படுத்தும் என்பதாக கொரியர்கள் நம்புகின்றனர்.

நாய்க் கறித் தடை காரணமாக தொழில்களை இழப்போருக்கு அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் என்று தென் கொரிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com