பிரான்ஸ் : விவசாயிகள் போராட்டத்தில் உலகப்புகழ் பெற்ற மோன லிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சி

பிரான்சில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் உலகப் புகழ்பெற்ற மோன லிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
மோன லிசா ஓவியம் | கோப்புப்படம்
மோன லிசா ஓவியம் | கோப்புப்படம்

பாரிஸ் : பிரான்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக மனம் குமுறும் விவசாயிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகளை அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் கழிவுகளை  அரசு அலுவலக வாயில்களில் கொட்டி, அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், போராட்டத்தின் போது  காலநிலை மாற்றம் தொடர்பான ஆர்வலர்கள் இருவர், உலகப் புகழ்பெற்ற மோன லிசா ஓவியத்தின் கண்ணாடி கூண்டின் மீது தங்கள் கைகளில் இருந்த சூப்பை வீசி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள இலூவா அருங்காட்சியகத்தில் மோன லிசா ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மோன லிசா ஓவியத்தை சேதப்படுத்தும் முயற்சி நடப்பது இது முதன்முறையல்ல. இதனையடுத்து குண்டு துளைக்காத கண்ணாடி சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அங்கிருந்த பாதுகாப்பு அரண்களை தாண்டி ஓவியம் வைக்கப்பட்டிருக்கும் கூண்டின் அருகே சென்ற அவர்கள், ”ஆரோக்கியமன உணவு முக்கியமா? அல்லது கலை பெட்டகங்கள் முக்கியமா? பிரான்சில் விவசாயிகள்  உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வேளாண் அமைப்பு நோய்வாய்ப்பட்டு கிடக்கிறது” என்று  முழக்கமிட்டனர்.

உடனடியாக அங்கே வந்த அருங்காட்சியக ஊழியர்கள், அங்கிருந்த பார்வையாளர்களை வெளியேற்றியதோடு மோன லிசா ஓவியத்தை சுற்றி பாதுகாப்பை அதிகரித்தனர். 

இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, பிரான்சின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள  கப்ரியேல் அட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக  பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.எனினும், அரசின் இந்த அறிவிப்புகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள விவசாய சங்கங்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com