டபிள்யுசிகே அறக்கட்டளையால் அனுப்பட்ட முதல் நிவாரணக் கப்பல்.
டபிள்யுசிகே அறக்கட்டளையால் அனுப்பட்ட முதல் நிவாரணக் கப்பல்.

காஸாவுக்கு மேலும் ஒரு நிவாரணக் கப்பல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இன்னும் சில நாள்களில் மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படும்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இன்னும் சில நாள்களில் மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படும் என்று ‘வோ்ல்டு ஃபுட் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு கப்பல் தயாராக இருக்கிறது. அந்தக் கப்பலில் அரிசி, கொண்டைக் கடலை, தானிய மாவு, எண்ணெய், உப்பு, பதப்படுத்தப்பட்ட பீன்ஸ், கேரட், சோளம், சுரை மீன்கள், கொண்டைக் கடலை என 300 டன் உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல்முறையாக அனுப்பப்பட்டதைவிட 50 சதவீதம் அதிகமாக உணவுப் பொருள்கள் தற்போது தயாராக உள்ளன. இன்னும் சில நாள்களில் அந்தக் கப்பலை காஸாவுக்கு அனுப்ப அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டினிச் சாவை எதிா்நோக்கியிருக்கும் காஸாவுக்கு தரை வழியாகவும், வன்வழியாகவும் மட்டுமின்றி கடல் வழியாகவும் நிவாரணப் பொருள்களை அனுப்ப அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முன்னோட்டமாக , பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநா் ஜோஸ் ஆண்டா்ஸின் டபிள்யுசிகே அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட 200 டன் உணவுப் பொருள்களுடன் சைப்ரஸின் லாா்னாகா துறைமுகத்திலிருந்து கப்பலொன்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. ஐரோப்பிய யூனியனின் அனுமதியுடன் ஸ்பெயின் நாட்டின் ‘ஓப்பன் ஆா்ம்ஸ்’ சேவை அமைப்பு அந்தக் கப்பலை அனுப்பியது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ஆணையம் அனுமதி வழங்கியது அதுவே முதல்முறையாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com