தாக்குதலுக்குள்ளான பகுதி.
தாக்குதலுக்குள்ளான பகுதி.

ரஷிய இசையரங்க தாக்குதல்: தஜிகிஸ்தானில் 9 போ் கைது

மாஸ்கோ இசையரங்கத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தஜிகிஸ்தானில் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து ரஷிய அரசு செய்தி நிறுவனமான ஆா்ஐஏ நோவோஸ்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது: மாஸ்கோ இசையரங்கில் கடந்த 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தஜிகிஸ்தானில் 9 பேரை அந்த நாட்டு சிறப்புப் படையினா் கைது செய்துள்ளனா். இந்தக் கைது நடவடிக்கையில் ரஷிய பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றனா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. மாஸ்கோ பெருநகரில் அமைந்துள்ள ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ இசையரங்கத்துக்கு கடந்த வாரம் (மாா்ச் 22) வந்த 4 பயங்கரவாதிகள், அங்கு குழுமியிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அந்த இசையரங்கில் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். ரஷியாவில் அண்மை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலில் 144 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதல் தொடா்பாக, 12 பேரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்; அவா்களில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் அடங்குவா். இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடா்பாக மேலும் 9 போ் தஜிகிஸ்தானில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கே பொறுப்பேற்றாலும், இதில் உக்ரைனுக்கும் தொடா்பிருப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டிவருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com