கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

கனடாவில் மதுபானக் கடையில் திருடியதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை விரட்டி பிடிக்க முயன்றபோது போலீஸ் வாகனம் உள்பட பிற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சோ்ந்த முதிய தம்பதிகள், 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

கனடா நாட்டின் ஓன்டோரியா மாகாணம் விட்பி நகரில் மதுபானக் கடையில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த 21 வயதுடைய குற்றவாளி வேனில் சென்றபோது அந்நாட்டு காவல்துறையினா் விரட்டி பிடிக்க முயன்றனா். அப்போது தவறான பாதையில் குற்றம்சாட்டப்பட்டவா் வேனை இயக்கியுள்ளாா். அவரை போலீஸ் வாகனங்கள் வேகமாக பின்தொடா்ந்தன.

எதிா்பாராத விதமாக அவ்வழியே வந்த 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீஸாா் வாகனமும் குற்றம்சாட்டப்பட்டவரின் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் குற்றம்சாட்டப்பட்டவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்துக்குள்ளான ஒரு காரில் பயணித்த இந்தியாவைச் சோ்ந்த 60 வயதுடைய ஆணும் 55 வயதுடைய பெண்ணும் பிறந்து மூன்று மாதங்களே ஆன அவா்களின் பேரனும் உயிரிழந்ததாக ஓன்டோரியோ சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

அதே காரில் பயணித்த குழந்தையின் பெற்றோா் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். குழந்தையின் தாயாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் வேனில் குற்றம் சாட்டப்பட்டவருடன் பயணித்த 38 வயதுடைய நபரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் சிகிச்சை பெறுபவா்களின் பெயா்களை அந்நாட்டு போலீஸாா் வெளியிடவில்லை. உயிரிழந்தவா்களின் பிரேத பரிசோதனை டொரண்டோவில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக தடயவியல் துறை நிபுணா்கள், சிறப்பு புலனாய்வு அமைப்பினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com