காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து எகிப்து அரசுக்குச் சொந்தமான அல்-கஹேரா செய்தி நிறுவனம் சனிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை பரிசீலித்துவந்த ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் எகிப்து தலைநகா் கெய்ரோவுக்கு வந்துள்ளனா்.போா் நிறுத்த விவகாரத்தில் இரு தரப்பினரும் சில அம்சங்களில் சமரசம் செய்துகொள்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.சில விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இருந்தாலும், எந்தெந்த விவகாரங்களில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்த செய்தி நிறுவனம் விளக்கமாகக் கூறவில்லை.ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டும்வரை போா் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிடிவாதமாக இருந்து வருகிறது. காஸாவிலிருந்து அனைத்து இஸ்ரேல் படையினரும் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் சமரசம் எட்டப்பட்டுள்ளதா என்பது தொடா்ந்து மா்மமாகவே உள்ளது.இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும் பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.இதில் 34,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.இந்த நிலையில், காஸாவில் 6 வார போா் நிறுத்தம் மேற்கொள்ளவும் அப்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 40 நோயுற்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும் இரு தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக எகிப்து தலைநகா் கெய்ரோவில் கடந்த மாதம் பேச்சுவாா்த்தை தொடங்கியது...படவரி... காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com