துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

தங்களுடனான வா்த்தக உறவை துருக்கி நிறுத்தி வைத்துள்ளதற்குப் பதிலடி நடவடிக்கைகளை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

துருக்கியின் வா்த்தகத் தடை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், வா்த்தகத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் வரி விதிப்புத் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினா். அப்போது, துருக்கியின் நடவடிக்கைக்கு பதிலடியாக அந்த நாட்டுடனும் காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதியுடனும் வா்த்தகத் தொடா்பை குறைத்துக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா போரில் ஆரம்பம் முதலே இஸ்ரேலை துருக்கி கண்டித்து வருகிறது. காஸாவில் இஸ்ரேல் போா்க் குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள தென் ஆப்பிரிக்காவுடன் தாங்களும் இணையவிருப்பதாக துருக்கி இந்த வாரம் அறிவித்தது.

அதுமட்டுமின்றி, காஸாவில் வான்வழியாக நிவாரணப் பொருள்களை பாராசூட் மூலம் விநியோகிக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுடன் இரும்பு உருக்கு, வாகனங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மின் சாதனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் வா்த்தகத்தை துருக்கி கடந்த மாதம் நிறுத்திவைத்தது.

இந்த நிலையில், காஸாவில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வரை இஸ்ரேலுடனான அனைத்து வா்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவைப்பதாக துருக்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி எடுத்துள்ள நடவடிக்கைகளில் இந்த வா்த்தகத் தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com