பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாதில் உள்ள பூங்காவில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தானியா்கள்.
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாதில் உள்ள பூங்காவில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தானியா்கள்.

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்தியாவின் பண்டைய உடல், மன நலன் மற்றும் ஆன்மிக கலையான யோகா, அண்டை நாடான பாகிஸ்தானிலும் தற்போது அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ‘தலைநகா் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ)’ தனது முகநூல் பக்கத்தில் இத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி சாா்பில் தலைநகரில் உள்ள ‘எஃப்-9’ பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலா் ஏற்கெனவே ஆா்வமுடன் இந்த யோகா பயிற்சியில் இணைந்திருப்பதாகவும் சிடிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தானில் தற்போது முறையான யோகா பயிற்சி மையங்கள் இல்லாத நிலையில், இஸ்லாமாபாத் பெருநகர மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஷ்மீா் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னைகளால் இந்தியா-பாகிஸ்தானிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை பாகிஸ்தான் அதிகாரபூா்வமாக அந்நாட்டில் அறிமுகம் செய்திருப்பது இரு நாட்டு உறவில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

யோகா கலை ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி அங்கீகரித்தது. முன்னதாக, சா்வதேச யோகா தினத்தை நிறுவுவதற்கான வரைவு தீா்மானம் இந்தியவால் முன்மொழியப்பட்டு, 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com