அல் ஜசீரா அலுவலகம்
அல் ஜசீரா அலுவலகம்

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

இஸ்ரேல் அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்ததாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இஸ்ரேலில் உள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களை மூட இஸ்ரேல் அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்ததாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் அல் ஜசீரா சேனலை இஸ்ரேலில் மூடுவதற்கு எனது தலைமையிலான அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது’ என குறிப்பிட்டாா். இது நிரந்தர முடிவா அல்லது இடைக்கால முடிவா என்பது குறித்தும் அரசின் இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் அவா் குறிப்பிடவில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அல் ஜசீரா மறுத்துள்ளது.

காஸா போரை நிறுத்த கத்தாா் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் நெதன்யாகு ஹமாஸ் தலைவா்களுக்கு கத்தாா் அடைக்கலம் தருவதாக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாா். இந்நிலையில் கத்தாரை தலைமையிடமாகக் கொண்ட அல் ஜசீரா நிறுவனத்தின் மீதான இஸ்ரேலின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே கடந்தாண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது. இதுதொடா்பான செய்திகளை நேரலையாக அல் ஜசீரா தொடா்ந்து வழங்கி வந்தது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் அல் ஜசீரா செயல்பட முடியாவிட்டாலும் காஸா பகுதியில் வழக்கம்போல் செயல்படும் என நிறுவனத்தைச் சோ்ந்த சில பத்திரிகையாளா்கள் தெரிவித்தனா்.

அல் ஜசீரா நிறுவனம் ஒருதலைபட்சமாகவே செயல்படுவதாக இஸ்ரேல் பல முறை தெரிவித்து வந்தது. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின்போது அந்த நிறுவனத்தைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். அதேபோல் காஸா போரை படம்பிடிக்க சென்ற அல் ஜசீரா ஒளிப்பதிவாளா் ஒருவரும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தாா். இதனால் இஸ்ரேலுக்கும் அல் ஜசீராவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடா்ந்தது.

அரபு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடா்பாக செய்தி வெளியிட்டதற்காக அந்நாட்டு அரசுகளால் அவ்வப்போது அல் ஜசீரா செய்தி தொலைக்காட்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com