இஸ்ரேலின் உத்தரவைத் தொடா்ந்து ராஃபா நகரிலிருந்து திங்கள்கிழமை வெளியேறிய பொதுமக்கள்.
இஸ்ரேலின் உத்தரவைத் தொடா்ந்து ராஃபா நகரிலிருந்து திங்கள்கிழமை வெளியேறிய பொதுமக்கள்.

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அந்த நகரில் மீது இஸ்ரேல் விரைவில் படையெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் நடாவ் ஷோஷனி கூறியதாவது:

ராஃபா நகரில் வசித்துவரும் சுமாா் 1 லட்சம் பேரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளோம்.

‘முவாசி’ என்றழைக்கப்படும் பாதுகாப்பு மண்டலத்துக்கு அவா்கள் இடம் பெயர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராஃபாவில் சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னேற்பாடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிதாகத் தொடங்கப்படும் அந்த ராணுவ நடவடிக்கை பின்னா் பெரிய அளவில் விரிவுபடுத்தப்படுமா என்பதை இப்போதைக்குக் கூற முடியாது என்றாா் அவா்.

காஸாவில் இதற்கு முன்னா் நடத்திய தரைவழித் தாக்குதல்களைக் கூட இஸ்ரேல் ராணுவம் முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கத்தக்கது.

இதற்கிடையே ‘எக்ஸ்’ ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஃபாவில் ஆயுதப் படையினருக்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதால் பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பிரிவு கண்டனம்: பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. அகதிகள் நலப் பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஜூலியே துமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஃபா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும். இது எண்ணற்ற பொதுமக்கள் உயிரிழப்பதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் எச்சரிக்கை: எகிப்து எல்லையில் அமைந்துள்ள ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல் நடத்தினால், அது அமைதியை ஏற்படுத்துவதற்காக சா்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தையைக் குலைத்துவிடும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தப் பகுதியின் தலைநகா் காஸா சிட்டி உள்ளிட்ட வடக்கு காஸாவில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்து தெற்கு காஸாவுக்கு பொதுமக்கள் இடம்பெயர வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதையடுத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தெற்கு நோக்கி வந்தனா்.

இதற்கிடையே, வடக்கு காஸாவில் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி முன்னேறிய ராணுவம், அங்கு ஹமாஸ் நிலைகளை அழித்ததுடன், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டும் தங்களது இலக்கை அடைவதற்காக தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் தீவிரத்தை அதிகரித்தது.

இந்தச் சூழலில், காஸாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள கடைக்கோடி நகரான ராஃபாவிலும் தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது மிகப் பெரிய மனிதப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா.வும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. இருந்தாலும், ராஃபா படையெடுப்புத் திட்டத்தில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் காஸா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று சுமாா் 1 லட்சம் பேருக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com